Wednesday, February 8, 2012

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நோக்கிய சிவில் சமூகத்தினது கோரிக்கை சாமானிய மக்களின் உளவிருப்புகளின் பிரதிபலிப்பு அல்ல.

அண்மையில் சிவில் சமூகத்தினர் எனும் பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நோக்கி ஒரு பகிரங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையானது கொண்டுள்ள விடயதானங்கள் பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதோடு பொதுமக்களிடையே பெரும் குழப்பநிலையையும் தோற்றுவிக்கத்தொடங்கியுள்ளது.
முப்பது வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மீள உயிர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. நீண்டகால யுத்தத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்ட அப்பாவி மக்களின் சின்னாபின்னமாக்கப்பட்ட வாழ்வு எதிர்காலம் மீதான நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மெல்ல மெல்ல நகர ஆரம்பித்துள்ளது.
 வடக்கு கிழக்கு மக்கள் பிரிவினைவாதத்தையும் வன்முறைக் கலாசாரத்தையும் மறந்து இலங்கையராக பெரும்பான்மையின மக்களுடன் ஐக்கியப்பட்டுவாழ தலைப்பட்டுள்ளனர். நாட்டில் குடிகொண்டிருந்த பகைமை உணர்வுகளும் இனக்குரோதங்களும் பழங்கதையாய்ப்போய் இனங்களிடையேயான பரஷ்பர புரிதலும் இன நல்லிணக்கமும் மேம்பட்டுவருகின்றன. இந்தநிலையில்தான் தமிழ் மக்கள் சார்பில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தினைக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரச தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றது. இப்பேச்சுவார்த்தைகள் இடையிடையே முறிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவருகின்றபோதிலும் மீண்டும் மீண்டும் நம்பிக்கையுடன் கூட்டமைப்பினர் அரசுடனான பேச்சுக்களை தொடர்துகொண்டே வருகின்றனர். அதனைத் தொடர்வதைத் தவிர வேறு வழியேதும் இல்லை என்பதை அமெரிக்காவரை சென்று களைத்துவிட்ட கூட்டமைப்பினரும் உணர்ந்துகொண்டதனால்தான் என்னவோ அரசுடன் பேசி இணக்கப்பாடு ஒன்றைக்காணும் முயற்சியில் கூட்டமைப்பினர் இறங்கியுள்ளனர் எனத் தெரிகின்றது.
இதற்கிடையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றைக் கூட்டுகின்றேன், அங்கே அனைத்து தமிழ் கட்சிகளும் ஒருமித்த தீர்வொன்றுடன் வந்து முன்வையுங்கள்;. அதை அடிப்படையாக வைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என்று ஜனாதிபதியும் அடிக்கடி கூறியுள்ளார். இந்திய தரப்பும் அதையே வேண்டி நிற்பதாக அறிய முடிகின்றது. கடந்தகாலங்களில் ஜனநாயகப் பாதையில் பயணித்திருந்த தமிழ் கட்சிகள், அல்லது ஜனநாயகப் பாதைக்கு திரும்பிய தமிழ் கட்சிகள் ஏதாவது தீர்வை முன்வைக்கின்ற வேளைகளிலோ ஏற்றுக்கொள்ளுகின்ற வேளைகளிலோ அதற்கு புலிகள் முட்டுக்கட்டை போட்டு வந்திருந்திருந்தனர். அதிர்ஸ்ட வசமாக அந்த இக்கட்டான நிலைமை இன்றில்லை. இந்த சூழலை பயன்படுத்தி ஏதாவது ஒரு குறைந்தபட்ச தீர்வில் தமிழ் கட்சிகள் ஒன்றிணையும் வாய்ப்புக்கள் அதிகரித்திருக்கின்றன. இப்படியானதொரு சூழலை பயன்படுத்திக்கொள்ள கூட்டமைப்பினர் மனதார முன்வருவார்களா என்கின்ற கேள்விகள் ஒருபுறமிருக்க பெரும்பான்மையான மக்களின் உளவிருப்பம் அதைநோக்கியே காணப்படுகின்றது. அதை உணர்ந்துகொண்டதனால்தானோ என்னவோ கூட்டமைப்பினரும் அப்படியொரு தீர்வை நோக்கி நகரவேண்டிய நிலைமையில் இருக்கின்றர்கள்.
முதலில் தம்மோடு மட்டுமே அரசு பேசவேண்டும் என்று கூட்டமைப்பினர் புலிகளின் பாணியில் மார்பு தட்டிக்கொண்டாலும் அது ஜனநாயகத்துக்கு விரோதமான ஏகபிரதிநிதித்துவ கோரிக்கை என்பதனால் அதையிட்டு கூட்டமைப்பினரது இறுக்கம் நெகிழும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே நடத்தப்படப் போகும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுத்து முதலில் ஏதாவதொரு தீர்வினை ஏற்றுக்கொள்வதையிட்டு சிந்திப்பார்கள் என்று மக்கள் நம்பியிருக்கின்றனர். இதுவே எமது மக்களின் இன்றுள்ள அவசியத் தேவையுமாகும்.
இந்தநிலையில்தான் சிவில் சமூகத்தின் சார்பில் கூட்டமைப்பினரை நோக்கிய மேற்படி கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை வெளியாகியுள்ளது. இவ்வறிக்கையானது கொண்டுள்ள கோரிக்கைகளின் சாராம்சம் பேச்சுவார்தைகளின் ஊடாக கூட்டமைப்பினருக்கும் அரசுக்குமிடையில் எந்தவிதமான தீர்வும் எட்டப்பட்டுவிடக்கூடாது என்பதை நோக்கியதாகவே காணப்படுகின்றது. மீண்டும் மீண்டும் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்று புலிகளின் பாணியில் பிரிவினைவாதக் கருத்துக்கள் மீது கட்டப்பட்டவையாகவே இக்கோரிக்கைகள் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி இவ்வாறான தூண்டுதல்களும், உருவேற்றுதல்களும் மென்மேலும் முரண்பாடுகளை வளர்க்கவே உதவும். தீர்வுகளை நோக்கி இருதரப்பினரும் நகரும் வாய்ப்பினை அது சீர்குலைக்கும்.
சிவில் சமூகத்தின் அரசியல் வெளிப்பாடுகள் என்பது ஒரு சமூகப்பொறுப்புமிக்கதாக மிளிரவேண்டும். அமைதியையும் சமாதானத்தையும் நோக்கி மக்களையும் கட்சிகளையும் நாட்டையும் வழிநடத்த அந்த வெளிப்பாடுகள் முயலவேண்டும். ஆனால் இங்கோ வெளியாகியுள்ள சிவில் சமூகத்தின் அறிக்கையானது இன்நோக்கங்களுக்கெல்லாம் எதிர்மாறானதொன்றாகவே காணப்படுகின்றது என்பதுதான் ஆச்சரியமாகும்.
சமாதானம் என்பதோ தீர்வு என்பதோ இருதரப்பினரதும் பரஷ்பர விட்டுக்கொடுப்புகளிலும், சமரசங்களிலும் இருந்தே கட்டியெழுப்பப்பட வேண்டியதொன்றாகும். அதைவிடுத்து விடாப்பிடியாக நிற்பவர்களால் ஆக்கபூர்வமாக எதையுமே செய்யமுடியாது.  புலிகள் இருந்த காலத்தில் கூட்டமைப்பினரை தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற தீவிரவாத பிரிவினைக் கொள்கைகளுடனேயே அவர்கள் வழிநடத்தினார்கள். அதன்காரணமாகவே பேச்சுவார்த்தைகளில் தீர்வுகள் எட்டப்பட முடியாமல் போயிற்று. பல பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் கொண்டுவரப்பட்ட தீர்வுப்பொதியில் இன்றைய மாகாணசபைகளைவிட கூடிய அதிகாரங்கள் அடங்கியிருந்தன. ஆனாலும் புலிகளின் அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு தமிழ்தேசியக் கூட்டமைப்பினரே அத்தீர்வுப்பொதியை நிராகரித்தனர். அன்று கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து சந்திரிகாவின் தீர்வுப்பொதியை எதிர்த்திருக்காவிட்டால் அமைதியும், தீர்வும் எப்போதோ ஏற்பட்டிருக்கும். அது மட்டும் அன்றி அதன்பின்னரான எவ்வளவோ அழிவுகளும் இழப்புகளும் தவிர்க்கப்பட்டும் இருக்கும். அது போன்ற அரிய பல சந்தர்ப்பங்களை கூட்டமைப்பினர் நிராகரித்து வந்தமைக்கு புலிகளது தீவிரமான தேசியவெறியும், இறுக்கமான போக்குகளுமே காரணமாயின. புலிகளைப் பொறுத்தவரையில் வன்முறைமீதும் பயங்கரவாத நடவடிக்கைகள் மீதும் நம்பிக்கை கொண்ட அரசியல் ஞானசூனியங்கள் அவர்கள். அவர்களால் அப்படித்தான் வழிகாட்டமுடியும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் இன்று வெளியாகியுள்ள கூட்டமைப்பினரை நோக்கிய அறிவுறுத்தல் கோரிக்கைகள் ஒரு சிவில் சமூகத்தின் பெயரால் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அன்றைய புலிகளது அறிவுறுத்தல்களுக்கும் இன்றைய சிவில் சமூகத்தினரது அறிவுறுத்தல்களுக்கும் இடையில் எவ்வித வேறுபாடுகளும் தெரியவில்லை. எப்படியான ஆலோசனைகளையும் அறிவுறுதல்களையும் புலிகள் கடந்தகாலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழங்கி எந்தவொரு சமாதானத்தையும் எட்டமுடியாதவாறு தவறாக வழிநடாத்தினார்களோ அதிலிருந்து சற்றேனும் பிசிறாமல் அதே பாணியிலான அறிவுறுதல்களே ஆனோசனைகள் எனும் பெயரில் இன்று இந்த சிவில் சமூகத்தினராலும் வழங்கப்பட்டிருக்கின்றன.
 இதற்கு முழு சான்றாக சிவில் சமூகத்தினரின் கோரிக்கைகளில் காணப்படும் தேர்தல் பகிஷ்கரிப்பு அறிவுறுதல்களைக் கொள்ளலாம். அதாவது வடமாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படும் பட்சத்தில் அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பகிஷ்கரிக்க வேண்டும் என்று அப்பட்டமாக கேட்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் என்பன ஜனநாயகத்தின் உயிர்நாடிகள் என்பார்கள் அரசியல் அறிஞர்கள். ஜனநாயக ஆட்சியொன்றின் முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்றாகவே தேர்தல்களும் வாக்களிப்புகளும் நடாத்தப்படுகின்றன. அத்தகைய தேர்தலை அதுவும் சுமார் 25 வருடங்களின் பின்னர் மறுக்கப்பட்டிருந்த வடமாகாண மக்களுக்கான அந்த வாய்ப்பினை பகிஷ்கரிக்கக் கோருவதென்பது நிட்சயமாக ஒரு சிவில் சமூகத்தினரின் பொறுப்புமிக்க கடமையாக இருக்கமுடியாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
 இந்த நிலையில் வடகிழக்கு இணைப்பு பற்றி மேற்படி சிவில் சமூகத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கையானது கிழக்கு மாகாணத்தின் இயல்புநிலையை சீர்குலைக்கும் முயற்சியாகவே காணப்படுகின்றது. அதுமட்டும் அன்றி கிழக்குமாகாண மக்களின் இறைமைக்கு எதிரான கருத்தாகவே இதனை நாம் காண்கின்றோம். கிழக்கில் மறைந்திருக்கும் தேசியவாத உணர்வலைகளை கிளறிவிட்டு தமிழ் தேசியம், முசுலிம் தேசியம் என்ற குரோதங்கள் மீள எழுவதற்கு இந்த இணைப்புகோரிக்கை வழிவகுக்க நேரிடும். அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் யாரும் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேசமாட்டார்கள்.
சுமார் அரைநூற்றாண்டு காலத்தால் உழுத்துப்போன வடக்கு – கிழக்கு இணைப்பு கோரிக்கையை தூசுதட்டி எடுத்து சிவில் சமூகத்தினர் எனும் பெயரில் மீண்டும் அரசியல் முக்கியத்துவம் கொடுக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளமையானது கிழக்கு மாகாண மக்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப்போடும் முயற்சியாகும். இவ்விணைப்பு கோரிக்கையானது காலமாகிவிட்ட கதை என்பதை கூட்டமைப்பினரும் புரிந்துகொண்டுள்ளனர் என்பதனால்தான் “பிரிந்த கிழக்கில் போட்டியிட மாட்டோம்” என்று  அன்று கூறியவர்கள், “கிழக்கு மாகாணசபை என்ற ஒன்றே எம்மைப்பொறுத்தவரை இல்லை” என்றவர்கள் இன்று தனித்த வடக்கு மகாணசபைக்கு போட்டியிட தயாராகிவருகின்றனர்.
இன்று கிழக்கு அமைதிப் பூங்காவாக இருக்கின்றது. அபிவிருத்தியில் கிழக்கு முதல்வர் மன்னராக திகழ்கின்றார் என்று கூட்டமைப்பு எம்பி செல்வராசாவே புகழாரம் சூட்டியிருக்கின்றார். வடக்கும் கிழக்கும் அடாத்தாக இணைக்கப்பட்டிருந்த 22 வருடங்களும் உக்கிரமடைந்திருந்த தமிழ் – முசுலிம் குரோத நிலை இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இனநல்லுறவு மேலோங்கியுள்ளது.
இந்த நிலையில் வடக்கு கிழக்கு இணைவு பற்றி மேற்படி சிவில் சமூகத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கையானது கிழக்கு மகாணத்தின் இயல்பு நிலையை சீர்குலைக்கும் முயற்சியாகும். கிழக்கில்  மறைந்திருக்கும் தேசியவாத உணர்வலைகளை கிறளிவிட்டு தமிழ் தேசியம்,  முசுலிம் தேசியம் என்று குரோதங்கள் மீள எழ இந்த இணைப்ப கோரிக்கை வழிவகுக்க நேரிடும். அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் யாரும் இன்றைய நிலையில் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைப்பது பற்றி பேசமாட்டார்கள். ஆனால் யேசுவின் பெயரால் சமாதானம் செய்யும் பேராயர் தலைமையிலான இந்த சிவில் சமூகத்தினர்  அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றார்கள். தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்று சாமானிய மக்களின் வாழ்வியல் தேவைகளுக்கு குழிபறிக்கும் இவ்வரசியல் கோசங்களை இந்த சிவில் சமூகத்தினர் முன்வைத்திருப்பது மிகவும் வேதனைமிக்க செயலாகும்.
ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி.

இனங்களுக்கிடையிலேயான புரிந்துணர்வின் அவசியத்தை வலியுறுத்தும் அறிக்கையும்… புகலிட வெள்ளாள மார்க்சியமும்”

-இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி-
வடக்கிலிருந்து இனச்சுத்திகரிப்பிற்குள்ளான முஸ்லிம் சமூகத்தின்  மீதான அக்கறையில்  “தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில்,அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்”  எனும் தலைப்பில் ஓர் அறிக்கை வெளிவந்த செய்தி பலர் அறிந்ததே. அந்த அறிக்கையில் கையொப்பம் இட்டவர்கள், இப்படியொரு அறிக்கை வெளியிடவேண்டும் என சிந்தித்து அவ்வறிக்கையை தயாரிக்க காரணமாக இருந்தவர்கள் என அனைவர் மீதும் எமக்குள்ள தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, விமர்சனங்கள் என்பதற்கும் அப்பால், எதிர்காலங்களில் இனங்களுக்கிடையிலேயான ஒருமைப்பாட்டினதும், இனங்களுக்கிடையிலேயான புரிந்துணர்வின் முக்கியத்துவமும், கருதி அவ்வறிக்கையை  நாம் ஆதரிக்கின்றோம்.
இவ்வறிக்கை வெளிவந்தபோது அதனது  அவசியத்தை உணர்ந்து எமக்குள் உரையாடியதோடு வேறுபணிகளில் எமது கவனத்தை செலுத்தினோம். இவ்வறிக்கைக்கு எதிராக வெளிவந்த ‘கோட்பாட்டுப் பிரசங்கங்களையும்’ நாம் பொருட்படுத்தவில்லை.
சமீபத்தில் பல நாட்கள் இலங்கையில் நின்று  அங்குள்ள நிலைமைகளையும் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தவர்கள் தான்  இவ்வறிக்கை வெளிவரத் தூண்டுதாலக  இருந்துள்ளனர். எப்போதுமே தமது எண்ணங்களோடும், தமது சித்தாந்தங்களோடும்,கோட்பாடுகளோடும் உடம்பு நோகாம,அலையாம கொம்யூற்றர் முன்னால் இருந்து கொண்டு அறிக்கை விடுபவர்களை நாம் எப்போதுமே பொருட்படுத்துவதில்லை.
இருந்தபோதும் தீபம் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக அவ்வறிக்கை மீதமான விவாதம் நிகழ்ந்த பிற்பாடு அவ்வறிக்கையானது வெகுஜன எல்லைக்குள் சென்றுவிட்டது. எனவே அவ்றிக்கையை பலப்படுத்த வேண்டிய பணியை உணர்ந்துகொள்வதோடு ‘புகலிட வெள்ளாள மார்க்சியர்கள்’ குறித்த மீள் பார்வையின்  நிர்ப்பந்தமும் எமக்கு ஏற்பட்டுள்ளது.  
இந்த ‘புகலிட வெள்ளாள மார்க்சியர்கள்’ உடம்பு நோகம, அலையாம தமது கனவுகளோடு கொம்யூற்றர் முன்னால் இருந்து எழுதுபவர்கள் என்பதற்கு ஓர் ஆதாரம்: // பாசிச இலங்கை அரச அமைச்சர் ஒருவரை ஐரோப்பாவிற்கு அழைத்து தலித் மாநாட்டை நிகழ்த்திவிட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரலெழுப்புவதாகக் கூச்சலிடும் இவர்கள் அபாயகரமானவர்கள்// என தொலைக்காட்சியில் அறிக்கைக்கு எதிராக ‘கோட்பாட்டுப் பிரசங்கம்’ நிகழ்த்திய திரு.நாவலன் அவாகள் தனது இணையத்தளத்தில் எழுதியுள்ளார்.
இவர்களுக்கு நடைமுறை உண்மைகள் எதுவும் தெரிவதில்லை, தெரிந்து கொள்ள வேண்டும் எனும் அக்கறையுடன் உழைப்பதற்கும் இவர்கள் தாயாரில்லை. அறிக்கை எழுதியவர்களுக்கும் தீபம் தொலைக்காட்சியில் அறிக்கையின் பயன்பாடுகள் குறித்துப் பேசியவர்களுக்கும் இலங்கை அமைச்சரை ஜரோப்பாவிற்கு அழைத்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் உபதலைவர் யோகரட்ணம் அவர்கள் எழுதிய நூலின் வெளியீட்டிற்காக தலித் சமூக மேம்பாட்டு முன்னணியே நூல்வெளியீட்டிற்காக அமைச்சர் வாசுதேவநாணயக்கார அவர்களை பிரான்சிற்கு அழைத்தது. வாசுதேவநாணயக்காரா அவர்கள் தனிப்பட்ட வகையில் தோழர் யோகரட்ணம் அவர்களின் நீண்டநாளைய நண்பரும்கூட. கடந்த காலங்களில் சிங்கள இடதுசாரிகள் தலித் சமூகத்தின் மீதான மேட்டுக்குடி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பல்வேறு உதவிகளைளை செய்தவர்கள். அதன்மூலமாக தலித் சமூகம் பல்வேறு உரிமைகளைப்  பெற்றதென்பதும் வரலாற்று உண்மை.  அந்தவகையில் வாசுதேவநாணயக்காரா அவர்களை அழைத்து கௌரவப்படுத்தியதை தலித் சமூகத்தின்  ஒரு வராலாற்றுக் கடமையாகவும் நாம் கருதுகின்றோம்.
சம்பவம் இவ்வாறு இருக்க, தலித் மாநாட்டிற்கு அமைச்சரை அழைத்ததாகவும் அமைச்சரை அழைத்தவர்கள் தன்னோடு விவாதம் செய்தவர்கள் என்பதாக   கோட்பாட்டுப் பிரசங்கரான நாவலன் அவர்கள் எழுதியுள்ளார். தனக்குமிக அருகில் நடந்த ஓர் சம்பவத்தின் உண்மைநிலையை அறிந்து கொள்வதற்கான  முயற்சியை மேற்கொள்ள முடியாதவர் எவ்வாறு சமூகத்தில் நிலவும் மாற்றங்கள், பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகளின் தன்மைகளை புரிந்துகொள்ளமுடியும்!
முதலில அதிகாரத்தை பெறுவோம் அதற்கு பிற்பாடு எமக்கிடையிலான பிரச்சனைகளை பேசித்தீர்ப்போம் எனும் அறிவுரைகளையும்,போதனைகளையும் நாம் இன்று நேற்று கேட்டுப்பழக்கப்பட்டவர்கள் அல்ல. மேட்டுக்குடி சாதியினரால் தலித் சமூகம் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்காக அன்று சோல்பெரிகெமிசனிடம் நியாயம் கேட்கமுயன்றபோது இவ்வாறான போதனைகள்தான் எமக்கு அருளப்பட்டது. அன்றைய வெள்ளாள மிதவாதிகள் போதனைகளுக்கு அப்பால் பகுதிநேர செயல்பாட்டாளர்களாகவும் இருந்தவர்கள். ஆனால் இன்றைய புகலிட வெள்ளாள மார்க்சியர்கள் வெறும் போதகர்கள் மட்டுமே. இந்த வெள்ளாள மார்க்சியர்களின் கருத்தியலோடு நாம் முற்றாக முரண்படுவது மட்டுமல்லாது…., இவர்கைள அனுதாபத்தோடு அணுக வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதையும் நாம் உணர்ந்துள்ளோம். (…..)
புலிகளால் தான் மூஸ்லிம் மக்கள்  வெளியேற்றப்பட்டவர்கள் வடக்கிலுள்ள மக்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனக்கூறி யாழ்ப்பாண சமூகம் தப்பித்துக்கொள்ள முடியாது. விரும்பியோ விரும்பாமலே புலிகளை தமிழ் பேசும் மக்களின்  ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்ட சமூகம் தமிழ் சமூகம். எனவே முஸ்லிம் சமூகத்தின் வெளியேற்றத்திற்கான குற்ற உணர்வை  தலித் சமூகம் உட்பட அனைவரும் வெளிப்படுத்த தாயாராக இருக்கவேண்டும்.  “முஸ்லிம் மக்கள் மீதான பிரசைகளின் குழுவினால் தயாரிக்கப்பட்ட  மீட்சிக்கான தேடுகை: வடக்கு முஸ்லிம்களின் கதை என்ற ஆவணம்,முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்ப பட்டமை தொடர்பாக தமிழ் சமூகத்தின் மௌனம் பற்றி கண்டனம் மிக்க வெளிப்படுத்தல் ஒன்றை அண்மையில் மேற்கொண்டுள்ளது. நல்லிணக்கம் பற்றிய ஓர் உண்மையான  செயற்பாட்டினை நோக்கி நாம் நகர வேண்டுமாயின் நாம் இந்த மௌனத்தை கலைக்க வேண்டும்” என்பதாக விவாதத்திற்குள்ளான அறிக்கையில் பதிவாகியுள்ள விடயத்திலிருந்து நாம்அறிந்து கொள்வதென்ன! முஸ்லிம் சமூகமானது யாழ்ப்பாண சமூகத்தை நம்பத்தயாராக இல்லை. அவர்களது ‘மௌனத்தை கலைக்க வேண்டும்’ என்பதின் சொற்பிரயோகத்தின் நியாயத்தை நாம் புரிந்து கொள்வதெப்படி.  எம்மிடமிருந்து எவ்விதமான குற்றஉணர்வும் வெளிப்படாத  ‘கள்ளமௌனத்தைக்’ கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள் என்பதுதான் உண்மை.  யாழ்ப்பாண மேலாதிக்கத்தால் பாதிப்பிற்குள்ளான சமூகங்களின் துயரத்திற்கும், சிங்கள அரச அதிகாரத்தால் தமிழர்கள் அடைந்த துயரங்களுக்கும் உள்ள வேறுபாடுகளையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். முஸ்லிம் சமூகமானது யாழ்ப்பாண சமூகத்திடமிருந்து தமக்கான நஸ்ர ஈட்டை எதிர்பார்க்கவில்லை. குறைந்த பட்சம் மௌனத்தை கலைத்து எமது குற்ற உணர்வை வெளிப்படுத்தினால் அதுவே அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்ந்து வாழ்வதற்கான அடிப்படை நம்பிக்கையை  ஏற்படுத்தும்  என்றே நாம் கருதுகின்றோம். யாழ்ப்பாணிய பாராம்பரியப் பண்பாட்டு விளைவின் ஓர் அம்சமாகவும் முஸ்லிம் சமூகத்தின் வெளியேற்றம் நிகழ்ந்தது என்ற  உண்மையையும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
இவ்வாறான சாராம்சத்தை கொண்டதாக அமைந்துள்ள அறிக்கையை சிங்கள அரசின் பிரித்தாழும் நோக்கத்திற்கு சார்பாக அமைந்துள்ளது எனகூறுவது மிக அபத்தமானது. அவர்களே அறியாத இந்த ‘சனாதன  மனநிலையைத்தான் ‘புகலிட வெள்ளாள மார்க்சியம்’ என நடைபெற்ற தீபம் தொலைக்காட்சி விவாதத்தில் உருவி எடுத்து அம்பலப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
எதுவாக இருப்பினும் இவ்வாறான விவாதங்கள் தொடர்ந்து நிகழ்வது மிக ஆரோக்கியமானதே. விவாதத்தில் பங்கு பற்றிய இருதரப்பினரையும் நாம் பாராட்டுகின்றோம். அதற்கு தொடர்ச்சியாக களம் அமைத்து கொடுத்து வரும் தீபம் தொலைக்காட்சிக்கும் இவ்வாறான நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி நிகழ்த்திவரும் அனாஸ் அவர்களுக்கும் எமது நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
——
வெளிவந்த அறிக்கை
தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்
2009ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிவுற்ற பின்னணியில், இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இனக் குழுக்களும் தமது கடந்த காலத்தை மீள்பார்வை செய்வதும், மீள்மதிப்பீடு செய்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விடயங்களாக விளங்குகின்றன. எமது கடந்த கால செயற்பாடுகளின் மீதான ஒரு விமர்சன ரீதியான சுய பார்வையின் மூலமாகவே அரசின் முன்னும் சிவில் சமூகத்தின் முன்னும் இன்று தீர்வை வேண்டி நிற்கும் பிரதானமான விடயங்கள் பற்றி எதிர்காலத்தில் கருத்தாழம் மிக்க வழிமுறைகளில் நாம் சிந்திக்க முடியும்.
யுத்தம் தீர்க்கமாகமுடிவுற்ற போதிலும், இனப்பிரச்சினைக்கான முடிவு இன்னமும் தென்படவில்லை. இனப்பிரச்சினையானது குறுகிய மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை வேண்டி நிற்கிறது. பெரும்பான்மைவாத அரசிடமிருந்து ஒரு நீடித்திருக்கக் கூடிய தீர்வைப் பெறுவதற்கான தேடுகையில் தமிழ்ச் சமூகம் இன்று பிரதானமாகக் கரிசனை கொண்டுள்ளது. இராணுவ மயமாக்கத்தினாற் தொடரும் பாதுகாப்பற்ற நிலைமை ஓர் உடனடிக் கவனமாக அமைந்துள்ளது. ஆயுதப் போராட்டமும், வன்முறை நிறைந்த அரசியற் கலாசாரமும் சமூகத்தின் ஜனநாயகக் கட்டமைப்புக்களை மேலும் சிதைவுக்குட்படுத்தியுள்ளன. மீள்குடியமர்வு, மீள்நிர்மாணம் போன்ற விடயங்கள் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. காணிப் பகிர்வு, அரச மற்றும் சமூக வலையமைப்புக்களினைத் தொடர்புகொள்ளுதல், மொழி சமத்துவம், அதிகாரப் பகிர்வு, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், பால், வர்க்க, மற்றும் சாதி அடிப்படையிலான அடுக்கமைவுகளின் தொடரும் இருப்பு போன்றன இன்றைய அரசியல் நிலவுருவின் பகுதிகளாக விளங்குகின்றன.
இந்த வகையில் 21 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் தொடர்பான விடயத்தை நாம் இங்கு எழுப்புகின்றோம். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் யுத்த நடவடிக்கைகளும், ஆயுதப் போராட்டமும் வலுப்பெற்று வந்த சூழலில், தமிழீழ விடுதலைப் புலிகள் ஏறத்தாழ் 80, 000 முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றினார்கள். அன்றைய காலத்தில் ஆயுத ரீதியாகப் பலம் மிக்க அமைப்பாக, வட பகுதியின் பெருமளவிலான நிலப்பரப்பை தன்வசம் வைத்திருந்த விடுதலைப் புலிகள் ஒரு சமூகம் முழுவதையுமே இரண்டு தினங்களுக்குள் வட மாகாணத்தில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் அவர்களுக்கு 2 மணி நேர அவகாசம் மாத்திரமே வழங்கப்பட்டது. இந்த வெளியேற்றத்தின் பின்பு, வெளியேற்றப்பட்ட சமூகங்கள் தமது சொந்த நிலங்களுக்கு மீளவும் திரும்பிச் செல்வதற்கு உதவும் வகையில் பல்வேறு அமைப்புக்களாலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. போர் நிறுத்த உடன்படிக்கைக் காலப்பகுதியில், உடனடி மனிதாபிமான மற்றும் மீள்கட்டுமாணத் தேவைகளுக்கான செயலகம், இலங்கை அரசுடனும், விடுதலைப் புலிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்துவதன் ஊடாக, முஸ்லிம் மக்களின் மீள்திரும்புதலுக்கு வழிசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டது.
இன்றைய அரசியல் சூழலில், வட புலத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையும், அவர்களின் மீள்திரும்புகையும், மீள்குடியமர்வும் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சிவில் சமூகங்களின் மீதான தெளிவான ஒரு சவாலாக உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்த காலப்பகுதியில் இருந்து முஸ்லிம் மக்கள் வடக்கில் உள்ள தமது தாயகங்களுக்கு படிப்படியாகத் திரும்பத்தொடங்கியிருந்த போதிலும், அவர்கள் மீளத்திரும்புவதற்கு உகந்த சூழல் அமைந்திருந்திருக்கவில்லை. மீளத்திரும்பியவர்கள் அரசிடமிருந்து குறைந்தபட்ச உதவிகளைக்கூடப் பெறமுடியவில்லை. மேலும் அவர்கள் நிருவாக மையங்களின் விரோதப் போக்குகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் பண்பாடு மற்றும் நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாமற் போனமை அவர்களின் மீள்வருகையினை வட பகுதியில் உள்ள சமூகங்கள் குறைந்த அளவிலேயே ஏற்றுக்கொள்கின்ற தன்மையினை ஏற்படுத்தியிருப்பதுடன், திரும்பி வரும் மக்களுக்கு இடராகவும் அமைகின்றது.
போரின் போதும், போரின் பின்னரும் தமிழ் சமூகம் மிகுந்த உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றது என்பதனை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அதே போன்ற இடர்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட வட பகுதியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் நிலையினை நாம் நினைவில் நிறுத்துவது அவசியமானது. தமிழ் சமூகம் அனுபவித்த வேதனைகளையும், இன்னல்களையும் காரணங்காட்டி முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட விடயத்தை ஓரங்கட்ட முடியாது. வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் பிரயோகிக்கப்படுகின்ற அழுத்தங்களின் முன் எமது இருப்புக்காக எந்த அளவுக்கு நாம் போராடுகிறோமோ அதே அளவுக்கு நாம் எமது செயல்களின், எமது உறுதிக்கூற்றுக்களின், எமது மௌனங்களின் அரசியலினை மீளாய்வுக்குட்படுத்துவது அவசியமாகும்.
முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை கடந்த முப்பதாண்டு காலத் தமிழ்த்தேசிய அரசியற் பிரசாரத்தின் குறுகிய நோக்குடைய, பிற சமூகங்களினை ஒதுக்கித்தள்ளும் பாங்குடைய உந்துகையின் மிகவும் மோசமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். எங்களுடைய சிவில் மற்றும் அரசியற் தலைமைகள் இதனை விளங்கிக் கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ தவறியமை, கடந்த காலத்தினையும், எம்மத்தியில் வாழும் சிறுபான்மையினர் தொடர்பாக எமக்கு உள்ள தார்மீக மற்றும் அரசியற் பொறுப்புக்களையும் நாம் நியாயபூர்வமான முறையில் அணுகுவதிலிருந்து எம்மை தடுத்துவிட்டது. தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இடையிலான உறவுகள் துருவப்பட்டுப்போவதற்கு நாம் எவ்வாறு காரணங்களாக இருந்திருக்கிறோம் என்பது பற்றிய ஒரு சுயவிசாரணை முப்பது ஆண்டு காலப் போரின் முடிவின் பின்னரும் கூடஎம்மத்தியில் உருவாகவில்லை. அரசியல் அதிகாரப் பகிர்வு, சமவுரிமை என்பன அனைத்து சிறுபான்மை சமூகங்களுக்கும் உரித்தான விடயங்கள் என்பதனையும், தமிழ் சமூகத்துக்கு மாத்திரமே உரித்தான ஏனையோரைக் கருத்திற் கொள்ளாத ஒரு அரசியற் தீர்வு இல்லை என்பதனையும் நாம் இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.
நீடித்திருக்கக்கூடிய ஓர் அரசியற் தீர்வினை அடைவதற்கு இனங்களுக்கு இடையில்– குறிப்பாக தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே– நல்லிணக்கமும், உரையாடலும் அவசியமான செயற்பாடுகளாகும். விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீதான பிரசைகளின் குழுவினால் தயாரிக்கப்பட்ட “மீட்சிக்கான தேடுகை: வடக்கு முஸ்லிம்களின் கதை” என்ற ஆவணம், முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப் பட்டமை தொடர்பாக தமிழ் சமூகத்தின் மௌனம் பற்றி கண்டனம் மிக்க வெளிப்படுத்தல் ஒன்றை அண்மையில் மேற்கொண்டுள்ளது. நல்லிணக்கம் பற்றிய ஓர் உண்மையான செயற்பாட்டினை நோக்கி நாம் நகர வேண்டுமாயின் நாம் இந்த மௌனத்தைக் கலைக்க வேண்டும்.
எங்களது இருப்புக்காக நாம் புதிய செயற்பாட்டியற் பாதைகளை உருவாக்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இன்றைய காலப்பகுதியில், ஏனைய சமூகங்களுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல்களிலிருந்து உதயமாகும் பதில்களை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். நாம் நீதியானதும், ஜனநாயக பூர்வமானதுமான ஒரு அரசியற் தீர்வைத் தேடுகையில் இது மிகவும் பிரதானமானது. இதற்கான ஒரு படியாக முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக பகிரங்கமான எதிர்ப்பு வெளியிடப்படல் வேண்டும். இந்தப் பலவந்தவெளியேற்றம் போன்ற ஒரு வெறுக்கத்தக்க செயல் எம்மத்தியில் இனிவருங் காலங்களில் ஒரு போதும் நிகழமாட்டாது என நாம் முழுமனதுடன் கூறவேண்டும். இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை நாம் ஒரு போதும் குற்றம் எனக்கருதாது இருக்கமாட்டோம் எனக் கூறவேண்டும். இந்த சம்பவத்தையும், அதன் தொடர்ச்சியையும் மீள்நோக்க வேண்டியஅதேவேளை, உரையாடல்களை ஏற்படுத்தவும், வடக்கில் முஸ்லிம் மக்களின் இலகுவான மீள்திரும்புகைக்கும், மீள்குடியமர்வுக்கும் உதவும் வகையில் பல்லின சமூகங்களை உள்ளடக்கிய பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துதல் அவசியமானது.
ஏனைய சமூகங்களின் இடர்களையும், நலன்களையும் கருத்திற் கொள்ளாது, தமிழ் சமூகம் தன்னிச்சையாகவும், மற்றைய சமூகங்களிலிருந்து தன்னை முழுவதுமாக விலக்கியும் தொடர்ந்து செயற்பட முடியாது. எந்தவொரு சமூகத்தினையும் பாதிக்கும் அநீதிகள், ஒடுக்குமுறைகள், வேற்றுமைப்படுத்தல்களினை நாம் அக்கறையுடன் அணுக வேண்டும். எல்லா மட்டங்களிலும் சமூகத்தின் பன்முகத்தன்மையினை எம்மத்தியில் ஊக்குவிப்பதற்கும், ஜனநாயகம், நீதி, சமத்துவம் என்பவற்றின் நலனை மையமாகக் கொண்ட பல்வேறு சமூகங்களையும் இணைத்துச் செயற்படுகின்ற ஓர் அரசியலினைப் பற்றிக் கொள்ளவும் நாம் எதுவித தயக்கமும் இன்றி உறுதி பூணுவோம்.
NAME SIGNATURE
1. Mr. P. Ahilan
2. Dr. Darshan Ambalavanar
3. Ms. Jovita Arulanantham
4. Ms. Kundhavi Balachandran
5. Mr. Sivakolunthu Buvanakumar
6. Dr. Godwin Constantine
7. Dr. Kumar David
8. Mr. R. Devarajan
9. Ms. Cayathri Divakalala
10. Dr. S Ganesan
11. Mr. Shaseevan Ganeshananthan
12. Mr. P.B. Gowthaman
13. Dr. Rajan Hoole
14. Ms. Sithiravel Ithaiyarani
15. Mr T. Antony Jeganathan
16. Ms. Vasuki Jayasankar
17. Dr. T. Jayasingam
18. Mr. D.B.S. Jeyaraj
19. Mr. Theliwattai Joseph
20. Mr. Ahilan Kadirgamar
21. Mr. Silan Kadirgamar
22. Ms. Niyanthini Kadirgamar
23. Ms. Sarvam Kailasapathy
24. Ms. Dushiyanthini Kanagasabapathipillai
25. Dr. S.V. Kasynathan
26. Mr. Thirukovil Kaviyuvan
27. Mr. Sathy Kulasingam
28. Mr. Prithiviraj Kulasingham
29. Prof. Vijaya Kumar
30. Ms. Maha Luxmy Kurushanthan
31. Mr. K.C. Logeswaran
32. Mr. S. Manisegaran
33. Mr. Chandrasekaran Manimaran
34. Mr. P. Muthulingam
35. Mr. V. Nandakumar
36. Ms. Malini Paramaguru
37. Ms. Nirmala Rajasingam
38. Ms. Vasuki Rajasingam
39. Mr. Sanjayan Rajasingham
40. Mr. C. Rajeshkumar
41. Ms. A. Renu
42. Ms. Kumudini Samuel
43. Ms. Rani Samuel
44. Dr. Paikiasothy Saravanamuttu
45. Dr. Muthukrishna Sarvananthan
46. Mr. Ambika Satkunanathan
47. Mr. Shyam Selvadurai
48. Rev. Jothini Seenithamby
49. Dr. T. Shanaathanan
50. Ms. M. Mangaleswary Shanker
51. Ms. C. Shanthini
52. Mr. Shobashakthi
53. Mr. P.N. Singham
54. Ms. Vasuki Sivakumar
55. Mr. K.S. Sivakumaran
56. Dr. Sumathy Sivamohan
57. Mr. Subramaniam Sivathasan
58. Mr. Balasingam Skanthakumar
59. Mr. M. Sooriyasekaram
60. Dr. K. Sritharan
61. Rev. M. Jude Sutharshan
62. Mr. H.D. Thampoe
63. Ms. Priya Thangarajah
64. Mr. Kandiah Thanikasalam
65. Mr. R. Thevamaran
66. Prof. S. Thillainathan
67. Dr. Sharika Thiranagama
68. Mr. M. Thiruvarangan
69. Mr. Uma Varatharajan
70. Mr. Godfrey Yogarajah
71. Mr. Ronnie Yogarajah

துரோகி: ஈழ அரசியலின் பூமறாங்

எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது- அது 1990- விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜா எனப்படும் மாத்தையா எனது சொந்தக் கிராமமான தம்பலகாமத்திற்கு வருகிறார். ஊரே திரண்டு அவரை வரவேற்கிறது. வீதிகள் தோறும் நிறைகுடம் சகிதமாக மக்கள் அவரை மலர் தூவி வரவேற்றனர். எங்கள் முறையின் போது நான் மாத்தையாவிற்கு சந்தனப்பொட்டு வைத்த நினைவுகள் இப்போதும் பசுமையாகவே இருக்கினறன. அப்போது ’இணக்கம்’ என்ற சொல்லைத் தவிர வேறு ஏதும் அறிந்திராத வயது. தமிழ் தேசியம் என்னும் சொற்தொடரை நான் ஒரு பேச்சுகுத்தானும் கேள்வுற்றிராத காலம் அது. எனது கிராமத்தில் ‘இயக்கம்’ என்னும் சொல்லைக்கூடப் பெரியளவில் புழக்கத்தில் இருக்கவில்லை. பொதுவாக இயக்கங்களைப் ‘பொடியள்’ என்றே மக்கள் அழைப்பதுண்டு. பின்னர் காலம் என்னையும் தமிழ் தேசிய பக்கமாக நகர்த்தியது. ஆனால் ஆச்சரியம்- தமிழ் தேசியத்தைச் சொற்களாகக்கூடக் கேள்வியுறாத காலத்தில் மலர் தூவி வரவேற்கப்பட்ட மாத்தையா,நான் தமிழ்த் தேசிய அரசியல் குறித்து அறிந்து கொள்ள முற்பட்டபோது, எனக்கு துரோகியாகவே அறிமுகமானார்.
எவ்வாறு மாத்தையா துரோகியானார்? எந்த அரசியல் மாத்தையாவை துரோகியாக்கியது? ஏவ்வாறு பல்வேறு இயக்கங்களின் தலைவர்களும் துரோகியானார்கள்? இந்த துரோக வாதங்களை மக்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்? நான் நன்கு அறிவேன்,இது பற்றி வெளிப்படையாக பேசுவதால் என்னையும் இந்தப் பூமாறங் துரத்தும்.ஆனால் இப்போது சில விடயங்கள் குறித்துப் பேசாது விட்டால் பிறகு எப்போதுமே பேச முடியாமல் போய்விடும். இன்று ஒரு போராட்டம் எப்படியிருக்கக் கூடாது என்பதற்கு ஈழ விடுதரைப் போராட்டம் உதாரணமாயிருக்கிறது. ஆகவே நாம் பல்வேறு விடயங்கள் குறித்தும் வெளிப்படையாகவே பேசியாகவேண்டும். இது நமது தலைமுறைக் கடமையாகும்.
ஈழ அரசியலைப் பொறுத்தவரை இன்று யாரெல்லாம் துரோகியல்ல என்பதைக் கண்டுபிடிப்பது தான் கடினமானது. அந்தளவிற்கு துரோகிகள் மலிந்துகிடக்கும் தேசமிது. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நேற்று வரை போராளிகளாக இருந்த பலர் துரோகிகளாக்கப்பட்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் துரோகிகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. யுத்தத்தின் தீர்மானகரமான முடிவின்போது. அரச படைகளிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகள் கூட நாளை துரோகப்பட்டியலில் இடம்பெறலாம். ஏலவே சிலர் சேர்க்கப்பட்டும் விட்டனர். இறுதியில் ‘துரோகி’ அது எவரையும் விட்டுவைக்காது போகலாம்.
ஈழ அரசியலை பொறுத்தவரை எந்தப் பக்கம் திரும்பினாலும்- அவன் துராகி- அவங்கட ஆள்- எங்கடயவல் இல்ல- இவ்வாறான கோஷசங்களைத்தாம் கேட்கமுடிகிறது. உண்மையில் துரோக வாதத்தின் ஊற்று எது? இதை தீர்மானிக்கும் அரசியல் எத்தகையது? இந்தக் கட்டுரை அரசியல் அர்த்தத்தில துரோகி அல்லது துரோகம் என்னும் சொற்களை கட்;டுடைக்க விளைகிறது. இதை விழங்கிக் கொள்வதற்குச் சற்று பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கிறது. ஈழ அரசியல்,தமிழீழ அரசியலாக உருமாறுவதற்கு முற்பட்ட காலத்து மேடை அரசியல் கோஷங்களை இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டிருக்கிறது.ஈழத்து அரசியல் சூழலில் முதல்முதலாக துரோகி அல்லது துரோகம் என்ற சொற்களை அரசியலுக்கு அறிமுகம் செய்தவர்கள் மிதவாத தலைவர்களே தவிர ஆயத இயக்கங்களல்ல.
இலங்கையில் முதலாவது தமிழ் அரசியல் கட்சியான ஜி.ஜி.பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கூட்டத்தில்தான் எங்களது தீர்மானத்துக்கு எதிராக கைகைளை உயர்த்துவோர், கைகளை இழக்க வேண்டிவரும் என்ற எச்சரிக்கை குரல் ஒலித்தது அகில இலங்கை தமிழ் காங்கிரசின் ஊடாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த, தந்தை செல்வா என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகம், காங்கிரசிலிருந்து வெளியேறித் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். இப்போது காங்கிரஸ் தரப்பினரை பொறுத்தவரையில் செல்வநாயகம் ஒரு துரோகி. இப்படித்தான் துரோகவாத அரசியல் கருக்கொண்டது.
தமிழரசு கட்சி கூட்டங்களின் போது பாம்பை விடுதல்,கூட்டத்தின்போது பறை மேளமடித்து தெர்ந்தரவு செய்தல், கட்சி பந்தலை இரவோடு இரவாக உடைத்தல் – இப்படித்தான் அன்று (தங்களின்) துரோகிகளான,தமிழசுக் கட்சியினரைக் காங்கிரஸ் பழிதீர்த்தது. மறுபுறமாக செல்வநாயகம் டட்லி சேனநாயகா அரசுடன் கைகோர்த்துக் கொண்டபோது தமிழரசு கட்சியில அங்கம் வகித்த வி.நவரெட்ணம் செல்வநாயத்தை துரோகி என்றார். இதன் தொடர்ச்சியாக நவரெட்ணம் தமிழர் சுயாட்சி கழகத்தை உருவாக்கினார். பின்னர் இடதுசாரிகள் சிறலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து ‘தோசே மசாலட வடே அப்பட எப்பா’ (தோசையும் மசால் வடையும் எங்களுக்கு வேண்டாம் – தமிழ் மக்களின் உணவு பழக்கத்தை காட்டுவதன் மூலம், தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு எதிரான சுலோகத்தை இவ்வாறு முன்னிறுத்தினர்) என்று பிரச்சாரம் செய்தபோது ஒட்டுமொத்த இடதுசாரிகளும் துரோகியானார்கள்.
பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி மேடைகளில் ‘துரோகி’- என்னும் சொல் தராளமாகவே பயன்படுத்தப்பட்டது. அப்போது அரசாங்கத்துடன் இணைந்திருந்த அரசியல் தலைவர்கள் குறிப்பாக அல்பிரட் துரையப்பா ’இயற்கை மரணத்துக்குரியவர் அலல’ என்றே அன்றைய கூட்டணியின் முக்கிய தலைவர்களான காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் போன்றோர் மேடைகளில் முழங்கிக் கொண்டீருந்தனர். இதையே பின்னர் பிரபாகரன் தத்தெடுத்துக் கொண்டார். 1975ம் ஆண்டு பிரபாகரன் அல்பிரட் துரையப்பாவைத் ‘துரோகி’ என்ற அடைமொழியுடன் படுகொலை செய்தார். ஈழத் தமிழர் அரசியலில் துரோகிகள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்னும் அரசியல் அறிமுகமாகிறது. அல்பிரட் துரையப்பா மீதான படுகொலை நடவடிக்ககையே புலிகளின் முதலாவது தாக்குதலாக பின்னர் பதிவு செய்யப்பட்டது. அல்பிரட் கொலைக்கு எந்தவொரு கூட்டணி தலைவரும் கண்டனம் தொவித்திருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் அதைத்தான் விரும்பியிருந்தனர். ஆனால் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்தைத் ’துரோகி’ என்னும் அடைமொழியுடன் புலிகள் படுகொலை செய்யதபோதுதான் தாங்கள் வீசிய ’துரோகி’ – பூமாறங் தங்கள் கழுத்தையும் குறிவைக்கிறது என்னும் உண்மை கூட்டணி தலைவர்களுக்கும் உறைக்கத் தொடங்கியது. ஆனால் பிரபாகரனோ அதை விடுவதாக இல்லை. எப்படித் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிமுகப்படுத்திய தமிழீழ சுலோகத்தைப் பிரபாகரன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாரோ அப்படியே ‘துரோகி’ என்னும் அழித்தொழிப்புவாத அரசியலையும் கெட்டியாகப்பிடித்துக் கொண்டார்.
வுரலாற்றில் எந்தவொரு பெறுமதியுமற்ற ‘துரோகி’ என்னும் சொற்பிரயோகத்தை ஒரு கருத்தியலாக வளர்த்தவர்கள் மிதவாதத் தலைவர்களே, விடுதலைப்புலிகள் அந்தக் கருத்தியலைத் தங்களது ஏகப்பிரதிநிதித்துவத்துக்குப் பயன்படுத்திக் கொண்டனர். தமது அரசியல் வேலைத் திட்டத்திற்குத் தொந்தரவாக அல்லது இடைஞ்சலாக இருந்தவர்க்ள அல்லது எதிர்காலத்தில் அத்தகைய ஒரு நிலைக்கு வரக் கூடியவர்கள் என்று கருதப்பட்டோர் அனைவரையும் மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்தும் தந்திரோபாயமாகவே இந்தத் ‘துரோகி’ அல்லது ‘துரோகம்’ என்னும் சொற்கள் அடுத்தவர்கள் மீது சுமத்தப்பட்டன. மிதவாத அரசியல் தலைவர்களால் முன்தள்ளப்பட்ட அரசியல் சுலோகத்தை அப்பழுக்கில்லாமல் உள்வாங்கிக் கொண்டன. ஆனால் புலிகள் போன்று இதை மிகவும் மூர்க்மாகவும் நுட்பமாகவும் எந்தவொரு இயக்கமும் பயன்படுத்தியிருக்கவில்லை. ஆனால் புலிகள் வீசிய பூமாறங் இப்போது அவர்கள் கழுத்துகளையும் குறிவைத்திருப்பதுதான் இதிலுள்ள முரண்நகை.
புலிகள் டெலோவை தாக்கி அழித்ததிலிருந்து ஏனைய இயக்கஙகளைப் போராட்ட அரசியலிருந்து அப்புறப்படுத்தியது வரை அனைத்தையும்’துரோகம்’ என்னும் ஒரு வார்த்தை கொண்டே நியாயபப்டுத்தினர். டெலோவை தாக்கியழித்தமைக்கு புலிகள் சொன்ன காரணம்- அவர்கள் இந்தியாவை இங்கு கொண்டுவர முயல்கின்றனர். டெலோவை புலிகள் தாக்குவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ‘பொதுமக்கள்’ என்ற பேரில் பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.டெலோ ஒரு மக்கள் விரோத அமைப்பு என்றவாரான கருத்து வெகுசன மனோநிலை ஆக்கப்பட்டது. பின்னர் புலிகள் டெலோவை அழித்தபோது ஏற்கனவே தயார்படுத்தப்பட்டிருந்த மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதே போன்று பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப். தாக்கப்ட்டபோதும அதே மக்கள் புலிகளுக்கு இளநீர் வெட்டிக் கொடுத்தனர்.
புலிகளே மற்றய இயக்கங்களை தாக்கியழிக்க முயன்றனர். எந்தவொரு இயக்கமும் புலிகளை தாக்கியழிக்க முயன்றதாக சான்றில்லை. ஆங்காங்கே சிறிய சச்சரவுகள் இடம்பெற்றிருப்பினும் புலிகளை அழித்துத் தங்கள் தலைமையை உறுதி செய்துகொள்ள வேண்டுமெனும் முனைப்பில் எந்தவொரு இயக்கமும் செயற்பட்டிருக்கவில்லை. இதை விடயமறிந்த அனைவரும் அறிவர். ஆனால் சகல போராட்ட இயக்கங்கள் மத்தியிலும் தலைமை குறித்த ஈடுபாடும் எதிர்பார்ப்பும் இருந்தததையும் மறுப்பதற்கில்லை. அத்தகைய தலைமை குறித்த எதிர்பார்ப்பே டெலோவை அழிக்க முயலும் புலிகள், நாளை தங்களையும் அழிக்க தயங்கமாட்டார்கள் என்ற உண்மையை விளங்கிக் கொள்ள முடியாத நிலைக்குள் அவர்களை தள்ளியது எனலாம். புலிகள் டெலோவை அழிக்க முற்பட்ட போது ஏனைய இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு புலிகளை எச்சரித்திருந்தால் அல்லது தடுத்திருந்தால் புலிகள் அடங்கியிருப்பர் அல்லது அழிந்திருப்பர். ஆனால் அந்த நேரத்தில் அவ்வாறு எந்தவொரு அமைப்பும் சிந்தித்திருக்கவில்லை.டெலோவை அழிப்பதில் வெற்றிகொண்ட புலிகள், அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்த முடியும் என்ற இறுமாப்பில் ருசி கண்டனர். இதற்கு அந்த நேரத்தில் புலிகள் தவிர்ந்த இயக்கங்கள் இந்தியாவுடன் தொடர்பிலிருந்ததை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
ஆனால் இவ்வாறு புலிகளால் வஞ்சிக்கபட்ட இயக்கங்கள், பிற்காலத்தில் தங்களின் பாதுகாப்புக் கருதிச் சில நடவடிக்கைகளை முன்னெடுத்ததும் உண்மையே அதில் விமர்சனம் இல்லாமல் இல்லை. ஆனால் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராட முன்வந்த பலரையும் அரசின் பக்கமாக சாயவேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கியவர்கள் புலிகள்தாம். புலிகள் தமிழ் மக்களுக்காக போராடும் ஏகபோக உரிமையைக் குத்தகைக்கு எடுத்துக்கொள்ள முற்பட்டதன் விளைவால், மிக உயர்ந்த இலட்சிய எண்ணத்தோடு வந்த பலர் போராட்ட அரசியலில் இருந்து அன்னியப்பட நேர்ந்தது. இது பற்றப் புலிகளால் தடைசெய்யப்பட்ட ஒரு முன்னணி இணக்கத்தின் மூத்த உறுப்பினருடன் பேசிக்கொண்டீருக்கும் போது அவர் கூறினார்- தமிழ் மக்களுக்காக நீங்கள் போராடக் கூடாது என்று சொல்லுவதற்குப் பிரபாகரனுக்கு என்ன உரிமை இருக்கிறது. அவர் எவ்வாறு அப்படி சொல்ல முடியும். எப்போது புலிகள் ஏனைய இயக்கங்களை அழித்து, தாங்கள் மட்டுமே போராடுவதற்குத் தகுதி உள்ளவர்கள் என்றனரோ அப்போதே தமிழர் விடுதலைப் போராட்ட அரசியல் முற்று பெற்றுவிட்டது, தவிர பிரபாகரனால் ஒரு போதும் எதையும் அடைய முடியாது என்பதும் அப்போதே தெளிவாகிவிட்டது.
இதிலுள்ள இன்னொரு முரண்நகையான விடயம் என்வென்றால்,தங்களுடைய நலனுக்காக அரசுடன் கூட்டுச் சேரும் அரசியலையும் தொடங்கி வைத்தவர்களும் புலிகள்தாம். இது பலரும் தொட்டுக் காட்டாத விடயமாகும். நான் இங்கு புலிகள் என்று குறிப்பிடுவது அதன் தலைமையையே அன்றி, தன்னலமற்றுப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட போராளிகளை அல்ல, இந்தியாவை வெளியேற்றும் நோக்கில் புலிகளே முதன்முதலாக அரசுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டனர்.
இந்திய படைகள் வடகிழக்கில் நிலை கொண்டிருக்கும் வரை தனது ஏகத்தலைமைவாத அரசியலை முன்னெடுக்க முடியாது என்று கருதிய பிராபகரன் பிரேமதாசாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டார். அன்னறைய சூழலில் புலிகளுக்கு எதிர் நிலையில் இருந்த இயக்கங்கள் அரசுடன் சேர்ந்திருக்கவில்லை. அப்போது தங்களது செயல்பாட்டிற்கு வகையில் ‘அரசு புலிகள் பேச்ச – புலிகளால் மேற்கொள்ளப்ட்ட ஒரு தந்திரோபாய நடவடிக்கை’ எனும் தலைப்பில் சிறு கைநூல் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர். நான்கு கேள்விகளுக்குப் பதிலளிப்பது போன்று தொகுக்கப்ட்டிருந்த மேற்படி நூலில் – இனவாத சிறிலங்கா அரசாங்கத்துடன் பேசுவது சரியான ஒன்றாகுமா என்னும் கேள்விக்கு – இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதில தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையே பொது நலன்கள் சந்தித்துக் கொள்கின்றன.எங்கள் நடவடிக்கை,யப்பானைச் சீனாவில் இருந்து வெளியேற்றுவதற்காக மாவோ, சியாங்காய் ஷேக்குடன் சமரசம் செய்து கொண்டதற்கு ஒப்பானதாகும் என்று பதிலளித்திருந்தனர்.
இதன் மூலம் தங்களது சொந்தநலன்களுக்காக எதிரியுடன் கூட்டுச் சோந்த புலிகள், மற்றவர்கள் தங்களது அரசியல் தெரிவுக்காக அரசுடனோ அல்லது இந்தியாவுடனோ சேர்ந்திருக்கும்போது அதை துரோகம் என்றனர். இராணுவத்துடன் தங்களது இருப்புக்காகச் சேர்ந்தியங்க முடியும் என்றும் வழிமுறைகளை சொல்லிக் கொடுத்தவர்களும் புலிகள்தாம். மன்னார் முள்ளிக்குளத்தில் அமைந்திருந்த புளெட் இயக்கத்தின் பிரதான முகாமைக் கடற்படையின் உதவியுடனேயே புலிகள் தாக்கி அழித்தனர்.அதில் புளெட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டனர். ஈழத் தமிழர் போராட்ட அரசியலில்(சொந்த நலன் கருதிய) எங்கள் இருப்புக்காக இராணுவத்துடன் இணைந்திருப்பதும் தவறல்ல என்னும் தந்ரோபாயத்தை முதலில் அறிமுகம் செய்தவர்கள் புலிகளேயன்றி வேறு எவருமல்லர். தாங்களே முதன்மை பெற வேண்டுமெனும் பிரபாகரனின் பிடிவாதம்தான், இறுதியில் தன்னலமற்று போராடப் புறப்பட்ட பல ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகள், பிற்காலங்களில் நாட்கூலிகளாக வேலை செய்ததை நான் கண்டிருக்கிறேன். இப்போது அந்த நிலை புலிகளின் போராளிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. புலிகளின் எதேச்சதிகாரச் செயல்பாடுகளால் ஏற்பட்ட வெறுப்பால்தான், புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் பலவும் அரசில் தஞ்சமடைய நேர்ந்தது. அத்தகையதொரு நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர் என்பதைத்தான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் அரசும் புலிகளின் இராணுவரீதியான செயற்பாடுகளை எதிர்கொள்ளுவதற்கு மற்றைய இயக்கங்களைப் பயன்படுத்திக் கொண்டது.
சுருக்கமாச் சொன்னால் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் எனின் அதில் ஒருவர்தான் இருக்க முடியும்- அது பிரபாகரன் தலைமையிலான புலிகள் மட்டும்தான். பிரபாகரனின் முடிவுக்கு மாறாக எவர் சிந்திப்பினும் அது துரோகம். எனது சிறு பிராயத்தில் மலர் தூவி வரவேற்கப்பட்ட மாத்தையா துரோகியானதும் இந்தப் பின்புலத்தின் விழைவுதான். டெலோவை அழிப்பதற்குப் புலிகள் என்ன பழிளை போதித்தனரோ அதே பழியை மாத்தையா மீதும் சுமத்தினர். மாத்தையா இந்திய உளவுத்துறையான ‘றோ’ உடன் இணைந்து பிரபாகரனை கொல்லச் சதி செய்தார் என்பதுதான் மாத்தையா மீதான குற்றச்சாட்டு. ஆனால் அது குறித்த எந்தவொரு ஆதாரத்தையும் புலிகள் பகிரங்கபடுத்தவில்லை. ஆனால் புலிகளிடம் அப்படி எந்தவொரு ஆதாரமும் அவர்களிடம் இல்லை என்பதுதான் உண்மை. மாத்தையாவின் குழுவில் இருந்த ஒருவருக்கு இந்திய உளவுத்துறை நடிகையொருவரை செட்பண்ணிக் கொடுத்தே மாத்தையாவை தங்கள் வலையில் வீழ்த்தியதென்றுகூடக் கதை சொல்லப்பட்டது. உண்மையில் பிரபாகரனின் முடிவு என்று வாதிட்டால், அதை செயல்படுத்த எத்தனித்தால் அதன் விளைவு துரோகியாகச் சாவதுதான்.
இன்று ஈழத் தமிழ் மக்கள் தங்களின் தலைவராக அங்கீகரித்திருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஒரு காலத்தில் புலிகளின் துரோக பட்டியலில் இருந்தவர் என்பது பலருக்கும் தெரியாத சங்கதி.சந்திரிகா அரசின் ஊடாகத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு முயன்றதால், சம்பந்தன் ‘போட்டுத் தள்ள வேண்டியவர்கள்’ பட்டியலில் இணைக்கப்பட்டார். அன்றைய சூழலில் சம்பந்தன் தனது வீட்டிற்கு நூறு மீற்றர் தொலைவிலுள்ள தனது குடும்ப ஆலயத்துக்கூட பாதுகாப்பு இல்லாமல் போக முடியாமல் இருந்தவர் என்பதும் பலருக்கு தெரியாத சங்கதியே! ஏற்கனவே சம்பந்தனின் ஆலோசகராகத் தொழிற்பட்டுக் கொண்டிருந்த கலாநிதி நீலன் திருச்செல்வம் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்த நிலையில்,அடுத்தது சம்பந்தன்தான் என்று வெகுசனப்பரப்பில் பேசப்படுமளவிற்கு நிலைமைகள் இருந்தன. நோர்வேயின் சமாதான முயற்சி சம்பந்தனின் உயிரை காப்பாற்றியது. அன்றைய நிலைமையில் சம்பந்தன் போன்ற ஜனநாயக அரங்கில் தடம்பதித்திருந்த தலைவர்களின் ஆதரவு புலிகளுக்குத் தேவைப்பட்டது. புலிகள்தாம் எல்லாம் என்பதைச் சம்பந்தன் ஒப்புக்கொண்டதால் ‘துரோகி’ சம்பந்தன் புலிகளின் வட்டத்திற்குள் சிறந்த தலைவரானார். இது பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவர் சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார். புலிகள் அமிர்தலிங்கத்தை துரோகி என்று சுட்ட போது உடுப்பிட்டி சிவா எனப்படும் சிவசிதம்பரம் காயத்துக்குள்ளானார். பின்னர் அதிஷ்டசவமாக தப்பித்தும் கொண்டார். ஒரு வேளை சிவசிதம்பரம் அன்றே கொல்லப்பட்டிருந்தால் ‘துரோகி’ ஆனால் பிழைத்துக் கொண்டதால் தம்பிதான் எல்லாம் என்று தியாகி ஆகிவிட்டார்.
ஆனால் இதிலுள்ள சுவாரசியம் என்னவென்றால், பிரபாகரன் யாரையெல்லாம் துரோகி என்று துரத்தினாரோ, அவர்களே இன்று ஈழத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்களாக வெளித் தெரிவதுதான்.
சிவவராம்- இந்தப் பெயர் நான் எழுதத் தொடங்கிய காலத்தில் எனக்கு ஆதர்ஷமான பெயர். ஒரு வகையில் நான் அரசியல் ஆய்வுத்துறைக்குள் வர வேண்டுமென்னும் உத்வேத்தை அளித்த பெயரென்றும் சொல்லலாம். ஆனால் இப்போது வெளிவரும் தகவல்களோ அனைத்தையும் புரட்டிப்போடுவதாக இருக்கிறது. நண்பர் நடராசா குருபரன் எழுதிவரும் ‘மௌனம் கலைகிறது’ என்னும் தொடரில் 2004 இல் விடுதலைப்புலிகளின் இராணுவ கட்டமைப்பபை நிலை குலையச் செய்த, கிழக்குத் தளபதியும் பிரபாகரனின் நம்பிக்கை நட்சத்திரமுமான கருணாவின் பிளவின் பின்னணியில் செயலாற்றிய மூளை சிவராமே என்று பதிவு செய்திருக்கிறார். கருணா பிளவின் பின்னரான நிலைமைகள் தனக்குப் பாதகம் என்பதை அறிந்ததும், சிவராம் பிரபாகரன் பக்கமாக சாய்ந்து கொண்டு, இராணுவ அர்த்தத்தில் வன்னியின் முக்கியத்துவம் என்ன என்பதை விளக்கும் வகையில் கருணாவுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். பின்னர் விடுதலைப் புலிகள் கருணாவை இராணுவரீரியாக எதிர் கொண்டபோது, அதற்கும் பிறிதொரு விளக்கத்தைக் கொடுத்திருந்தார். இதுவரை சிறிலங்கா இராணுவத்தை எதிர் கொண்டு வந்த புலிகள் தங்களது படைப்பிரிவொன்றையே வெற்றிகரமாக எதிர்கொண்டதன் மூலம் புதியதொரு அனுபத்தைப் பெற்றுக் கொண்டனர் என்பதாக, புலிகள் கிழக்கின் கருணா அணியினரைத் தாக்கியழித்ததை நியாயப்படுத்திருந்தார். வாசித்த நாங்களோ சிவராமின் இராணுவ விஞ்ஞான அறிவையெண்ணி மெச்சிக்கொண்டோம்.ஆனால் அதன் சூத்திரதாரியே சிவராம் எனும்போது என்ன சொல்வது! பபின்னர் சிவராம் படுகொலை செய்யப்பட்டபோது பிரபாகரன் தனது அதியுயர் விருதான ’மாமனிதர்’ விருதை வழங்கிக் கௌரவித்தார். புலிகளின் இராணுவ மரியாதையோடுதான் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இப்போது ஈழத் தமிழ் தேசிய அரசியலில் சிவராமின் இடம் என்ன- மாமனிதரா, தேசியவாதியா, துரோகியா, தியாகியா- சிவராம் யார்? எனவே இங்கு ஒரு விடயம் தெளிவாகிறது. பிரபாகரனின் முடிவுகளை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தால் அவர் தியாகி, சிறந்த தமிழ் தேசியவாதி- எதிர்த்தால் அவர் பக்கம் எத்தகைய நியாயம் இருப்பினும் அவர் ஒரு துரோகியே! கடந்த முப்பது வருட கால அரசியலில் துரோகி- தியாகி எனபது பிரபாகரனை ஆதரித்தல் எதிர்த்தல் என்பதில் தங்கியிருந்தது.
புலிகளின் வீழ்ச்சியை தொடர்ந்து இந்த (துரோக) முத்திரை குத்தும் அரசியல் நகைப்பிற்கிடமாகியது. அதுவரை புலிகளை எதிர்த்து நின்றவர்களையும் புலிகளை நிராகரித்தவர்களையும் மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்தவதற்காக பயன்டுத்தப்பட்ட ‘துரோகி’ என்னும் வாதம், ஆச்சரியகாரமான வகையில் அதன் மூத்த உறுப்பினர்களுக்கும் பலவருடங்களாகப் புலம்பெயர்ந்த நாடுகளில் பிரபாகரனுக்கு சேவகம் செய்தவர்களுக்கும் எதிராக திரும்பியது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போரின் போது வீரச்சாவடைந்து விட்டார் என்னும் தகவலை வெளியிட்ட புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பி. துரோகியானார். பின்னர் புலிகளின் சொத்துக்களை பதுக்கிக் கொள்வதில் ஏற்பட்ட கோஷ்டி மோதல்களின் காரணமாக பலர் துரோகிகளாக்கப்பட்டனர். காஸ்டோ பிரிவின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள் இருந்ததால் தங்களது செயற்பாடுகளுக்குக் குந்தகமானவர்கள் என்று கருதப்பட்டடோர் மீதெல்லாம் பிரபாகரன் வீசிய துரோகி-பூமாறங் அவரது சகாக்களையே பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
அல்பிரட்துரையப்பா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சபாரத்தினம், மாத்தையா, பத்மநாபா, நீலன்திருச்செல்வம், கருணா இன்னும் நூற்றுக் கணக்கானோருடன் நீண்டு கிடக்கும் பிரபாகரனின் துரோகி பட்டியலில் இப்போது பல புலிகள். இறுதியில் அது பிரபாகரனையாவது விடடுவைக்குமா என்பது சந்தேகமே!
யதீந்திரா
( நன்றி காலச்சுவடு பிப்ரவரி 2012)
Comments are closed.
அர்ஜூன் டாங்ளே அவர்களுடன் நேர்காணல்
Friday, January 15, 2010

மகாராஷ்டிரா மாநிலத்தின் அரசியலிலும் இலக்கியத்திலும் குறிப்பிடத்தக்க ஆளுமை அர்ஜூன் டாங்ளே. 1945 ல் மும்பையில் பிறந்தவர். மும்பை பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரி. நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய தலித் சிறுத்தைகள் ( தலித் பேந்தர் ) அமைப்பின் நிறுவனத்தலைவர்களில் ஒருவர். தற்போது பாரதீய குடியரசுக் கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர். இவரது நூல்கள்:


1. Chhavani Halte Ahe- போர்க்குற்றத்தின் பயணம் -கவிதைகள் ( 1978 ல் மாநில அரசின் விருதினைப் பெற்றது )

2. Hi Bandhavarchi Manse - ஏ... உறவுகளே... - சிறுகதைகள்

3. Dalit Sahitya, Ek Abhyas- தலித் சமூகத்திற்கு ஒரு பாடம் , விமர்சனம்

4. Dalit vidroha- - தலித்துகளின் எதிரி, இலக்கியம் மற்றும் அரசியல்சார் கட்டுரைத் தொகுப்பு

அர்ஜூன் டாங்ளே, தனது ஆக்கங்களை வெளியிட்டுக் கொள்வதை விடவும், தலித் இலக்கியத்தை உலகளாவிய வாசிப்புக்குகொண்டு செல்ல வேண்டும் என்பதில்தான் கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதனாலேயே அவர், மராத்திய தலித் ஆக்கங்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து தொகுப்புகளாக பதிப்பித்து வருகிறார். டாங்ளே மொழிபெயர்த்து, தொகுப்பாசிரியராயிருந்து வெளியிட்ட நூல்கள்:

1. A Corpse In The Well : (translations From Modern Marathi Dalit Autobiographies) 1992

2. No Entry For The New Sun: Translations From Modern Marathi Dalit Poetry

3. Homeless In My Land: Translations From Modern Marathi Dalit Short Stories

4. Poisoned Bread: Translations From Modern Marathi Dalit Literature

மும்பையில் வசிக்கும் தோழர் புதியமாதவி அவர்கள், புதுவிசைக்காக திரு அர்ஜுன் டாங்ளே அவர்களைச் சந்தித்து உரையாடியதிலிருந்து இந்நேர்காணல் தொகுக்கப்பட்டுள்ளது.

I

உங்கள் எழுத்துகள் எங்கள் தமிழுலகத்துக்கு ஏற்கனவே அறிமுகமானவை. குறிப்பாக தலித் இலக்கிய வட்டாரத்தில்உங்களை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. நாங்கள் அறியாத உங்கள் இளமைக் காலம் பற்றி அறியவிரும்புகிறோம்.

அர்ஜூன் டாங்ளே: நம்ம தாராவி அருகிலிருக்கும் மாதுங்கா லேபர் கேம்ப் பகுதியில்தான் நாங்கள் குடியிருந்தோம். என் அப்பாகாட்டன் மில்லில் வேலை செய்தார். 15.6.1945 ல் நான் பிறந்தேன். நாங்கள் 6 பேர் அண்ணன் தம்பிகள். தாராவி சால்களில் எனக்குநண்பர்கள் உண்டு. மும்பை துறை முகத்தில் வேலை செய்துகொண்டே நான் மர்ஸி தயாநந்த் கல்லூரியில் முதுகலை படித்தேன்.காலையில் கல்லூரி. 11 மணிக்கு மேல் வேலை. இதற்கிடையில் கவிதை, கதை என்று எழுத ஆரம்பித்தேன். என் தாய்வழி மாமாசங்கர் நாராயண் பவார் பொதுவுடமை இயக்கத்தில் இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் தான் மும்பையில் பாபாசாகிப் அம்பேத்கரின்போராட்டங்களும் இயக்கமும் செயல்பட்டுக் கொண்டிருந்தன. இந்த இரண்டு இயக்கங்களின் தாக்கங்களுடன் தான் என்இளமைக்காலம்.

ஆனால் பொதுவுடமை இயக்கமும் அம்பேத்கரிய இயக்கமும் ஒன்றுக்கொன்று எதிரெதிரானதாகத்தானேநிறுத்தப்படுகிறது? இரண்டுக்குமிடையே உள்ளது பகைமுரணா ? நட்பு முரணா?

இரு இயக்கங்களும் ஒன்றுக்கொன்று எதிரணியில் நிற்ப தாகச் சொல்லப்படும் கருத்துகளுடன் எனக்கு உடன் பாடில்லை. 1936ல்பாபாசாகிப் அம்பேத்கர் உழைப்பாளர் விடுதலை இயக்கத்தை (Independence labour party) ஆரம் பித்தபோது அந்த இயக்கத்தின்அடையாளமாக இருந்தது சிவப்புக்கொடிதான். மட்டுமல்ல,1938 வாக்கில் நிலமற்ற கூலிவிவசாயப் பெருமக்களை ஒன்றிணைத்துஅவர் நடத்திய பேரணியிலும், கருப்புச்சட்டத்தை (Black act) எதிர்த்து நடந்த போராட்டங்களிலும் பெரும்பான்மையான கம்யூனிஸ்ட்தோழர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். தொழிற்சாலைகளை, அங்காடிகளை அதன் உரிமையாளர்கள் எவ்விதமான முன்னறிவிப்போ காரணமோ இன்றி இழுத்து மூடுவதை அங்கீகரித்த சட்டம்தான் கருப்புச்சட்டம். அதை எதிர்த்து நடந்த போராட்டங்களில்டாங்கே, விவேஷ்கர், ஜம்னாதாஸ் போன்ற தோழர்களும் பிரிட்டிஷ் பிரட்லியும் கலந்துகொண்ட வரலாற்றை அறிந்தவர் எவரும்இரண்டு இயக்கங்களும் எதிரணியில் நிற்பதாகக் கருதுவதில்லை.

இந்தியச் சமூகச்சூழலில் சாதிப்படிநிலை ஒழியாமல் சமத்து வம் சாத்தியமில்லை என்ற கருத்தை உள்வாங்கிக்கொள்ளகம்யூனிஸ்டுகள் சற்று காலம் எடுத்துக்கொண்டார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் பல்வேறு இக்கட்டானகாலக்கட்டங்களில் இரு இயக்கங்களும் இணைந்தே செயல்பட்டிருக்கின்றன. 1957ல் மும்பை மாநகரை மொழிவழிமாகாணப்பிரிவின் அடிப்படையில் மராத்திய மாநிலத்துடன் இணைக்க நடந்த போராட்டங்களில் "ஒன்றுபட்ட மராட்டியம்" (united maharashtra) அமைப் பில் குடியரசுக் கட்சியும் அங்கம் வகித்திருந்தது. 17 சட்ட சபை உறுப்பினர்களும் 7 நாடாளுமன்றஉறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். பிரகாஷ் அம்பேத்கருடன் இணைந்து நாங்கள் ஆரம்பித்த 'பகுஜன் தலித் சமித்சமிக்தி' நிலவுரிமைக்காக நிறைய போராட்டங்களை நடத்தியது. 2009ல் இங்கு நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 3வது அணியின்பெயர் RLDF - Republican left democratic front. அம்பேத்கரிசம் Vs கம்யூனிசம் என்று அடிக்கடி நடக்கும் வாதங்கள் இரண்டுகருத்துருவாக்கங்களை எதிரணியில் நிறுத்தாமல் இணைகோட்டில் நிறுத்தும் வாதங்களாகவே கருதுகிறேன். சொற்பமான சிலர்வரலாறு அறியாமல் இரண்டையும் எதிரணிகளாக கருதி வாதிடுவதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

சி.பி.எம் தோழர்கள் இன்று அம்பேத்கரின் கருத்துகளை அதிகமாக அறிந்துகொள்ள விரும்புவதை நானறிவேன். அவர்கள் நடத்தும்இயக்கம் சார்ந்த இதழ்களில்கூட அம்பேத்கரின் புகைப்படம் அட்டைப்படமாக வர ஆரம்பித்துவிட்டது. பத்திரிகையாளர் மதுஷேட்டேபோன்றவர்கள் லெனின் எழு திய அரசும் புரட்சியும் புத்தகத்தையும் அம்பேத்கர் எழுதிய anihalation of caste புத்தகத்தையும் இவ்விருஇயக்கத்தாரும் கட் டாயம் வாசிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இரு இயக்கங்கள் சார்ந்த போராட்டக் களப்பணி இன்றுநீர்த்துப் போயிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்கள் தந்தையார் காட்டன் மில்லில் வேலை பார்த்ததை நீங்கள் சொன்னதும் இன்னொரு செய்தியும் நினைவுக்கு வருகிறது. இந்த மில் தொழில்வளர்ச்சி மும்பையில் ஏற்பட்டதால் மராத்திய தலித்துகளின் வாழ்க்கையில் மிகப்பெரியமாற்றம் ஏற்பட்டது என்று சொல்லலாமா?

உண்மைதான். கிராமங்களில் நிலமற்றவர்கள் நாங்கள். பண்ணையார்களுக்கு அடிமைகள். எங்கள் உழைப்புக்கு கூலி கேட்கும்உரிமை எங்களுக்கு கிடையாது. ஆனால் இந்த தொழில் வளர்ச்சி இந்த பண்ணை அடிமைகளுக்கு தொழிலா ளர் என்ற புதியமுகத்தைக் கொடுத்தது. எங்கள் உழைப்புக் கான ஊதியம் கிடைத்தது. உரிமைகளைக் கேட்பது தவறல்ல என்ற அடிப்படை உணர்வைரொம்பவும் சாதாரண எழுதப் படிக்கத் தெரியாத அனைவரும் புரிந்துகொண்டோம். எங்கள் தலைமுறையின் கல்விக்கு இந்தத்தொழில் வளர்ச்சி உதவி யது. மட்டுமல்ல. 60களில் நாராயண் சுர்வேயின் கவிதைகள்- தொழிலாளர் பிரச்னைகளை முன்வைத்துவெளிவந்தன. பாபுராவ் பாகுல் சிறுகதைத் தொகுப்பு - 'நான் என் சாதியை மறைத்தபோது' - 'jevha mi jaat chorli hoti' வெளிவந்தது. அந்தப்பத்து சிறுகதைகளையும் பத்துதடவை - மின்சாரம் தாக்கியது - ten electric shocks -என்று சொன்னார்கள்.

இந்த மில்களில் அப்போது நிலவிய தீண்டாமைக் கொடுமைகள் குறித்து தொழிற்சங்கங்களின் அணுகுமுறை என்னவாக இருந்தது?

அன்றைக்கு காட்டன்மில்களில் சாதியப்பாகுபாடு இருக்கத் தான் செய்தது. மில் தொழிலாளர்களின் யூனியன்களிலும் தீண்டாமைகடைப்பிடிக்கப்பட்டது என்பதை மறுப்பதற் கில்லை. அன்றைக்கு யூனியன் ஆபிஸ்களில் கயிறு/ரிப்பன் அல்லது நூல்களால்கோர்க்கப்பட்டிருக்கும் கோப்புகள் அல்லது காகிதங்களை பல்நுனியால் கடித்து அவிழ்ப்பார்கள். அப்படி பல்லால் கடிக்கும் குறிப்பிட்டஅந்த வேலைக்கு தலித்துகளை யூனியன் ஆபிஸ்களில் நியமிப்பதில்லை. தலித் எச்சில் பட்ட காகிதத்தைத் தொடுவது யூனியன்தலைவர்களைத் தீட்டுப்படுத்திவிடும் என்பதுதானே காரணமாக இருக்கக் கூடும்! இன்றும்கூட களப்பணியாளர்களிடம் சாதியம்காப்பாற்றப் பட்டுக் கொண்டுதானிருக்கிறது. மேதாபட்கரின் போராட் டங்களில் பங்கேற்றபோது கண்கூடாகக் கண்டேன்.களப்பணியிலும் சாலைப்போராட்டங்களிலும் கலந்து நின்றவர்கள் சாப்பிடும்போது தனித்தனியாகப் பிரிந்து நின்றார்கள். தமிழ்நாட்டில்கூட இரட்டைக்குவளை முறை இன்றும் கிராமங் களில் இருப்பதாக வாசித்திருக்கிறேன். அதுபோலத்தான் இதுவும்.மேதாபட்கரிடம் இதுபற்றி கேட்டபோது 'this is not my problem' என்று சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன்.

போராட்டக்களத்திலேயே சாதியம் இருக்கிறது தீண்டாமை நிலவுகிறது என்றால் மற்ற இடங்களைப் பற்றி சொல்வதற்கு என்னஇருக்கிறது? தலித்துகளுக்காக குரல் கொடுக்கிறார் கள் என்பதைவிட தலித்துகளுக்கு உதவி செய்வதை தொண்டுமனப்பான்மையுடன் - ஒரு charity அமைப்பு போல -நடந்து கொள்வதாகவே கருதுகிறேன். காங்கிரசாகட் டும் காந்தியாகட்டும்இன்றைய மேதாபட்கராகட்டும் இந்த விசயத்தில் ஒரேமாதிரியான மனப்பான்மையுடன்தான் இருந்தார்கள்/இருக்கிறார்கள்.

கல்வி நகரமயம் தொழில்மயம் போன்றவற்றால் சாதி ஒழிந்துவிடும் என்று சில அறிவுஜீவிகள் சொல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அன்றுபோல கண்டால் தீட்டு, தொட்டால் தீட்டு என்பதெல்லாம் மும்பை போன்ற மாநகர வாழ்க்கையில் ஜனநெரிசலில்மிதிபட்டுவிட்டது. இதை மட்டும் ஒரு மாற்றமாக கருத லாமே தவிர சாதியம் செத்துவிட்டது என்று சொல்வதற் கில்லை. லோக்கல்டிரெயினில் அருகருகே உட்கார்ந்து இன்று எல்லோரும் பயணம் செய்தாலும் பயணம் செய்கிற ஒவ்வொருவரின் அடிமனசிலும் சாதிவாழ்ந்து கொண்டு தானிருக்கிறது. கிராமத்தில் பண்ணையாருக்கு அடிமையாக வாழ்ந்த தலித், நகரவாழ்வில் குடிசைப்பகுதியில்வாழ்ந்தா லும் தினமும் சாலையோரத்தில் குப்பைகளை/ தாள்களை/ ப்ளாஸ்டிக்குகளைப் பொறுக்கிக்கொண்டு ஜீவனம் செய்தா லும்அவன் இங்கே எந்தப் பண்ணையாருக்கும் அடிமை யில்லை! மேலும் தனியார் நிறுவனங்களில் மட்டுமே வேலைவாய்ப்புகள்இருப்பதால் தலித்துகள் மற்றவர்களுடன் சேர்ந்து தன்னைத் தகவமைத்துக்கொண்டு வேலை வாய்ப்புகளை வசப்படுத்திக்கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ரிசர்வேஷன் காரணமாக இவன் இந்த வேலைக்கு வர முடிந்தது என்று சொல்லும்காரணங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

அடிமட்ட நிலை யில் தலித்துகளுக்கு இதனால் ஏற்பட்டிருக்கும் பாதகங்கள் அதிகம் என்பது உண்மைதான் எனினும் மும்பைபோன்ற மாநகர வாழ்க்கையில் சாதியம் தன் முகத்தையும் வேஷத்தையும் மாற்றிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.அதனால்தான் கிராமத்தை நோக்கிப் பயணம் செய்ய காந்தி போன்றவர்கள் சொன்னபோது பாபாசாகிப் கிராமத்தை விட்டு நகரத்தைநோக்கிய வாழ்க்கைப் பயணத்தை முன்னிறுத்தினார். இப்படியாக வெளிப்படையாக சாதியம் மும்பை மாதிரி மாநகரத்தில்தெரிவதில்லை என்பதாலேயே சாதியம் இல்லை, தீண்டாமை இல்லை என்று சொல்வதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாக அமையும். இங்கே இன்றும் திருமணவீட்டிலும் இழவுவீட்டிலும் சாதி அதற் கான முகம் மாறாமல் அப்படியேவாழ்ந்துகொண்டிருப் பதை நாமறிவோம். நம்முடைய குடியிருப்புகளில் கூட தலித்துகளில் பலர் தன் தலித்திய அடையாளத்தைமறைத்துக்கொண்டு ஏன் வாழ்கிறார்கள்? நகர வாழ்க்கையில் சாதி இல்லை என்றால் அப்படி மறைத்துக்கொண்டு வாழ வேண்டியஅவசியம் என்ன?

காட்கோபரில் (மும்பை புறநகர் பகுதி ) அம்பேத்கரின் சிலை அவமதிக்கப்பட்டதும் அப்போது நடந்தப் போராட்டங் களையும்நினைத்துப் பாருங்கள். மேதாபட்கரின் பேரணி களில் களப்போராட்டத் தளத்தில் நிலவும் சாதியம் குறித்து சொன்னதையும்யோசித்துப் பாருங்கள். எனவே சாதியம் செத்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. இதைவிடுத்து இன்றைக்கு கிராமப்புறங்களில்சாதிச் சண்டைகள் தீவிரமாகி இருக்கின்றன. தலித்துகளுக்கு ஏற்பட்டிருக்கும் விழிப்பு ணர்வு ஆதிக்கச்சாதியினரைஎரிச்சலூட்டுகிறது. பீகார், உத்திர பிரதேச மாநிலங்களில் மிகஅதிகமாக சாதிக் கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள் அவரது நோக்கங்களைப் பழுதற உள்வாங்கி செயல்படுகின்றனவா?

பார்லிமெண்டெரி டெமாக்ரசியில் அமைப்புரீதியாக அம்பேத்கரின் கருத்துகளை முன்னிறுத்தி அனைத்திந்திய அளவில் செயல்படும்ஓரமைப்பு தலித்துகளுக்கு இல்லை என்பதாலும் இருக்கிற தலித்திய அமைப்புகள் மாநில அளவில் மட்டுமே இருப்பதாலும்பெரும்பாலும் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்தே அரசியல் தளத்தில் நிற்பதாலும் அம்பேத்கரின்கருத்துருவாக்கங்களை இந்த இயக்கங்கள் முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை நீங்கள் வைப்பதாகஎண்ணுகிறேன். ஆனால் அம்பேத்கரின் கருத்துகள் இந்தியா முழுவதும் பரவி இருப்பதும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும்அவருடைய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு அந்தந்த மாநி லங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதையும் அமைப்பு கள்போராட்டங்கள் இயக்கங்களுக்கும் அப்பாற்பட்டு நடந்த ஒரு மிகப்பெரிய புரட்சியாகவே நினைக்கிறேன்.

50, 60 வருடங்களுக்கு முன் 1924 வாக்கில் காலில் செருப்பு போட அனுமதி மறுக்கப்பட்டவன் காலடியில் விரைந்து ஓடும் காரின்ஆக்ஸிலேட்டர் வந்துவிட்டதை மிகப்பெரிய மாற்றமாகவே நினைக்கிறேன். இந்த மாற்றங்களுக்கு அடித்தளமாக இருந்ததுஅம்பேத்கரின் ஜடியாலஜிதான். அமைப்புரீதியாக அம்பேத்கரின் இயக்கங்களுக்கு மட்டு மல்ல, கம்யூனிச இயக்கங்கள் எந்தளவுக்குமார்க்சியத்தை உள்வாங்கிக்கொண்டு செயல்படுகின்றன? காந்தியத்தை ஏற்றுக்கொண்ட காங்கிரசு எங்கே இருக்கிறது?

அம்பேத்கரின் சிந்தனை செயலூக்கத்துடன் நின்று செயலாற்றிய காலம் என்று எதை மதிப்பீடு செய்கிறீர்கள்?

1957 முதல் 1965 வரை அரசியல் களத்தில் செயலூக்கத்துடன் இருந்தக் காலம். நிலமற்றவர்களுக்கு வாழ்வாதாரமாக நிலம் வேண்டிநடந்தப் போராட்டத்தில் சற்றொப்ப 3,87,000 பேர் சிறை சென்றார்கள். அரசு அம்பேத்கரிஸ்டுகளின் போராட் டங்களைக் கண்டுஅச்சப்பட்டது. அக்காலத்தில்தான் உ.பி. யில் ரிபப்ளிகன் பார்ட்டியைச் சார்ந்த 3 பேர் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 1972முதல் 1975வரை மராட்டி யத்தில் தலித் பேந்தர்களின் காலம். அப்போது தலித் அல்லாத ஒத்த சிந்தனையாளர்களும் எங்களுடன்சேர்ந்து பணியாற் றினார்கள். கலை இலக்கியத் தளத்தில் அம்பேத்கரின் சிந்தனை செயலூக்கத்துடன் எப்போதும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்தியா முழுமையும் இந்த அலை கலை இலக்கியத் தளத்தில் தொடர்வதைத்தான் மிகவும் பெருமையும்மகிழ்ச்சியும் தரும் விசயமாக கருதுகிறேன்.

இந்தியக்குடியரசுக் கட்சி இருக்கும்போது 9.7.1972ல் நீங்கள் தனியாக தலித் சிறுத்தைகள் அமைப்பை ஏற்படுத்த என்ன காரணம்?

அமெரிக்காவின் கறுப்பின விடுதலையும் கறுப்பு இலக்கிய மும் என்போன்ற இளைஞர்களுக்கு அதுபோன்ற ஓர் அமைப்பைஉருவாக்கி நிறைய சாதிக்கவேண்டும் என்ற வெறியை ஏற்படுத்தி இருந்த காலக்கட்டம். கலகக்குரலாக கவிதை எழுதுவது மட்டும்இந்தச் சமூகத்தின் எந்தப் பிரச்னையையும் தீர்த்துவிடாது என்பதையும் உணர்ந்தோம். அப்போதுதான் நான்,என்னுடன் நாம்தேவ்தசல், ஜே.வி பவார் சேர்ந்து தலித் சிறுத்தைகள் அமைப்பை ஆரம்பித்தோம். குடியரசுக் கட்சியின் ஒரு மந்தமான செயல்பாடு எங்கள்வேகத்திற்கு அன்று ஈடுகொடுக்க முடியவில்லை. அதுவும் ஒரு காரணம்.

அவ்வளவு வேகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தலித் சிறுத்தைகள் அமைப்பு ஆரம்பித்த வேகத்திலேயே 1978ல் முடிந்துபோனது ஏன்? உங்கள் அமைப்பில் அப்படி என்ன பிரச்சனை ஏற்பட்டது? அதைத் தவிர்த்திருக்க லாம் என்று நீங்கள்எப்போதாவது நினைத்தது உண்டா?

ரொம்ப பெரிதாக எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. சின்ன கருத்தியல் முரண்பாடுகள்தான் காரணம். மூன்று விதமான குரல்கள்ஒலித்தன. ஒன்று மார்க்சியவாதிகள். எல் லாமே அதற்குள் அடக்கம் என்று நினைப்பவர்கள். அடுத்து தீவிர - கலப்படம் விரும்பாததூய அம்பேத்கரிஸ்ட். நமக்கு அம்பேத்கர் மட்டும் போதும் என்றார்கள், மூன்றாவது புத்திஸ்ட். பதவி, அதிகாரம் இருக்கும்இடத்தில்தான் விட்டுக் கொடுத்தலும் சமரசமும் தேவைப்படுகிறது. எங்கள் அமைப்புகளில் அப்படி எதுவுமில்லை. எனவே சமரசத்திற்கு யாரும் தயாரில்லை. இதேநிலை கம்யூனிச, சோசலிஷ, நக்சல் அமைப்புகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அடுத்தவர் களைஉதாரணம் சொல்வதன் மூலம் நான் எங்களை நியாயப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இப்போது நினைப்பது உண்டுதான்..நீங்கள் கேட்பது மாதிரி "தவிர்த்திருக்கலாமோ" என்று. எப்படியோ அது கடந்த காலம். இப்போதும்கூட தலித் பிரச்சனைகளில்நாங்கள் ஒன்றுபட்டு செயல்படுகி றோம். அடிக்கடி என்னைச் சந்திக்கும் பலர் தலித் சிறுத்தை கள் அமைப்பின் அவசியத்தை இன்றும்என்னிடம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..

உங்கள் வேகத்துக்கு இந்தியக் குடியரசுக் கட்சி ஈடுகொடுக்காது என்று சொன்ன நீங்கள் இன்று அதில்தானே இருக்கிறீர்கள்!

ஆமாம். மராத்திய மாநிலத்தில் வளர்ந்து வரும் சிவசேனா, விஷ்வ இந்து பரிஷத், மராத்திய நவ நிர்மான் சேனா, பி.ஜேபி என்று மதம்சார்ந்த அரசியல் சூழலில் ஒரு செக்குலார் அமைப்புக்கான தேவை இன்று அதிகம். அந்த வகையில் நாங்கள் இந்திய குடியரசுக்கட்சியில் சேர்ந்து எங்கள் செயல் பாடுகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.

குடியரசுக் கட்சியின் ஒருபிரிவு சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதை எவ்வாறு விளங்கிக் கொள்வது?

RPI இணைந்து நிற்கவில்லை. Rashtriya republican party சிவசேனாவுடன் சேர்ந்து நின்றது. இவர்கள் எப்போதுமே சிவசேனாவுக்கு ஜால்ராஅடிப்பவர்கள்தான். இது ஒரு பல கீனமான அமைப்பு. ஒரு சில இடங்களில் RPIலிருந்து தனிப் பட்ட காரணங்களுக்காகப் பிரிந்த சிலர்சிவசேனையுடன் இணைந்திருக்கலாம்.

இந்த நாட்டில் 1/5 ஆக இருக்கின்ற தலித்துகள் இயற்கை வளங்களில், பொதுச்சொத்தில், பொருளாதர வணிகச்செயல்பாடுகளில் கலை இலக்கிய பண்பாட்டு நடவடிக்கைகளில் உரிய பங்கை அடைவதற்குப் போராடாமல் பிறரோடுசேர்ந்து சில்லறை அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக தலைகளைக் காட்டி பங்கு வாங்கிக் கொள்வதாக தலித்இயக்கங்கள் வலுகுன்றிப் போயிருப்பதை எப்படி விளங்கிக்கொள்வது?

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆட்சிதான் கைமாறியது. மக்களாட்சி, அரசியல் சட்ட உரிமை என்றெல்லாம் வந்த பிறகும்ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற எது தடையாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தலித்மக்களில் படித்த நடுத்தர வர்க்கத் தினர் போராட்டங்களைக் கைவிட்டு அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்ள அடிப்படைக்கொள்கைகளை மறந்து விட்டு அரசியல் கட்சிகளுடன் பேரம் பேசி விலை போய்க் கொண்டிருக்கிறார்கள். அனைத்திந்திய தலித்தியஅரசியலமைப்பு/ அல்லது மாநில தலித் இயக்கங்களை ஒட்டுமொத்த இந்திய அளவில் ஒன்றணைக்கும் ஓரமைப்பின் தேவையைஉணர வேண்டும். அப்படி ஓர் அரசியல் சக்தியாக மாற்றம் பெற்றால் மட்டுமே நீங்கள் சொல்வதுபோல நமக்கான உரிய பங்கைநாமடைவது சாத்தியப்படக்கூடும். அதுவரை அவர் கள் தூக்கி எறியும் எலும்புத்துண்டுகளுக்காக காத்திருக்கும்தெருநாய்களாகத்தான் நாமிருப்போம். இந்தப் பூர்ஷ்வா அரசு தன் குடிமக்களை வாழவைப்பதும் இல்லை. சாகவிடு வதும் இல்லை,இரண்டுக்கும் நடுவில் தத்தளிக்கும் வாழ்க்கை. இந்த அரசு வீடு இல்லாதவனுக்கு தண்ணீர்க் குழாயும் மின்சாரமும் வழங்கும்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்கிறது. இம்மாதிரியான சூழலில் அம்பேத்கரின் கருத்துகளை முன்னெடுத்துச் செல்லும் அகிலஇந்திய அமைப்பின் தேவையை நாம் உணரவேண்டும்.

இப்போதைய சூழலில் ஒரு தலித் இயக்கம் அகில இந்திய மட்டத்தில் துவக்கப்படுவதாக இருந்தால் அல்லது இருக்கிறஇயக்கம் தன்னைச் சரிப்படுத்திக் கொள்வதென்றால் அதன் செயல்திட்டத்தில் இடம்பெற வேண்டிய தலையாய அம்சங்கள்என்று எவற்றைச் சுட்டிக்காட்டுவீர்கள்?

அந்தந்த மாநிலத்தின் தலித் இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி அனைத்திந்திய அமைப்புக்கான தேவைபற்றி பேசவேண்டியகாலக்கட்டமிது. அப்படி ஓரமைப்பு நிறுவப் பட்டால் மட்டுமே அரசியல் தளத்தில் அதிகாரப் பகிர்வும் உரிமைகளைப் பெறுவதும்சாத்தியப்படும். அந்த அமைப் பில் ஒத்தக்கருத்துள்ள தலித்தல்லாதவர்களையும் ஒன்றி ணைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.பாபா சாகிப்கூட சாதியடிப்படையில் மட்டுமே ஒன்றிணைக்கப்பட்டிருக்கும் இயக்கங்களை முழுமனதுடன் வரவேற்கவில்லை.

தலித் அல்லாதவர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று சொல்லும் நீங்கள் பகுஜன் மாயாவதிசர்வஜன் மாயாவதி ஆனதை விமர்சனம் செய்கிறீர்களே, ஏன்?

பகுஜன் சர்வஜன் ஆனதால் பகுஜனுக்கும் சரி சர்வஜனுக்கும் சரி.. என்ன கிடைத்தது? அதனால்தான் சொல்கிறேன் மீண் டும்சொல்கிறேன் ஒத்தக்கருத்துள்ள தலித் அல்லாதவர்களையும் இணைத்துக் கொண்டு என்று. "ஒத்தக் கருத்துள்ள' (like minded ) என்ற சொல்லை அடிக்கோடிட்டு வாசிக்கவும். தலித்தல்லாதவர்களை இணைத்துக்கொள்ளும் போது ஒத்தக்கருத்துள்ளவர்களாக இருக்கவேண்டியது அடிப்படை விசயம். இல்லை என்றால் நம் தேர்தல் கூட்டணிக்கும் இதற்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்!

தலித் மக்கள் சக்தி வலுவான அதிகாரமாக இந்திய அரசியலில் வளர்ச்சி அடையாமைக்கு என்ன காரணம்?

தலித் நேஷனல் பார்ட்டி கிடையாது. எல்லோரும் ஏற்றுக் கொண்ட தலித் தலைமை அம்பேத்கருக்குப் பின் நம்மிடம் இல்லை.பாபாசாகிப் அவர்களுக்கு தேசியஅளவில் தலித் அமைப்பு ஒன்று வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. டாக் டர் லோகியா, ஆச்சார்யஅதர்லே, சமாஜ்வாடி எஸ்.என். ஜோஷி ஆகியோருக்கு பாபாசாகிப் கடிதம் எழுதினார். ஆக்கப்பூர்வமாக அதைச் செய்வதற்குள் அவர் இறந்து விட்டார். தலித் அமைப்புகளின் மாநிலத்தலைவர்கள் உள்ளூரைத் தாண்டி வரத்தயாராகவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட மாநிலவாரியாக தங்கள் கூட்டணிகளை மாற்றிக் கொண்டாலும் மத்தியஅளவில் ஒன்றாக நிற்கின்றன. குறைந்தபட்சஅடிப்படைக் கொள்கைகளின் அடிப்படை யில் அனைத்து மாநில தலித் அமைப்புகளையும் ஒருங் கிணைக்கும் ஓர் அமைப்புஇன்றைய தேவை. அப்படிப்பட்ட ஓர் அமைப்பு ஏற்படாதவரை தலித் சக்திகளை அரசியல் தலைவர்கள் தங்கள் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்வார்கள்.

தலித்துகளுக்குள் நிலவும் சாதிப்படிநிலைகள், உட்சாதிப்பூசல்கள், இட ஒதுக்கீடுக்குள் உள்ஒதுக்கீடு- பற்றி எல்லாம்என்ன நினைக்கிறீர்கள்?

சாதிப்படிநிலைகள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. தலித்துகளில் இரண்டுவகை. ஒரு சாரார் இந்து தலித்துகள்.ஜெகஜீவன்ராம் போன்றவர்கள் இதில் அடங்குவர். ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் அம்பேத் கரை இந்து தலித்துகள்ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை! மகர்கள்தான் ரிசர்வேசனை அனுபவித்து முன்னேறி இருக்கி றார்கள். மாத், மதங் என்றுஇங்கேயும் உட்சாதி இட ஒதுக்கீடு குரல்கள் கேட்கின்றன. உள் ஒதுக்கீடுகளில் உள்ள சில நியாயங்களை இந்துத்துவவாதிகள் திசைதிருப்பி ஆதாயம் தேடிக்கொள்வதை அனைத்து தலித் உட்சாதிப்பிரிவினரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சேமநல அரசாக இந்திய அரசு முழுமை பெறுவதற்குள் உலகமயமாதலில் கால்வைத்துவிட்டது. இன்று அரசானதுசட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் ஓர் ஏஜென்சியாக மாறிவிட்டது. எனவே ஒடுக்கப்பட்டோர் நலனில் தனித்த அக்கறைசெலுத்த வேண்டும் என்பது பேச்சளவிலும் கூட கைவிடப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீடு நடைமுறையில்முடக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே தொழில் வணிகம் போன்றவற்றில் தலித்துகளுக்கு வாய்ப்பு குறைவு. மிகுந்தசவால்களுடன் கூடிய இந்த நிகழ்காலத்தை தலித்துகள் எவ்வாறு கடப்பது?

இந்திய அரசு உலகமயமாதலில் நுழைந்தது சரியா தவறா என்று பேசுவது இனி அர்த்தமில்லாதது. வெகுதூரம் வந்தாகி விட்டது.உலகமயமாதலில் இருந்து இனி நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வெளிவருவது சாத்தியமில்லை. அமெரிக்காவிலிருந்துஅறிவியலையும் அணு ஆயுதத்தையும் ஹை டெக்னாலஜியையும் இறக்குமதி செய்திருக்கும் நாம் அமெரிக்க அரசின் சில மனித உரிமைக் கொள்கைகளையும் தனியார் நிறுவனங்களிலும் கறுப்பர்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் முன்னுரிமையையும் சேர்த்தே இறக்குமதி செய்திருந்தால் நல்லது.

ஆனால் உலகமயமாதல் என்றால் அமெரிக்காவுக்கு அடிமையாதல் என்பதல்ல. அந்தப் புரிதல் நமக்கு வேண்டும். உலக மயமாதல்என்றால் நம் இயற்கை வளங்களை அடுத்தவன் கொள்ளை அடிக்க விட்டுவிட்டு நிற்பதல்ல. மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டினால்நம்மால் சில அழிவுகளிலிருந்து காத்துக் கொள்ள முடியும். மராட்டியத்தில் விடியோகோனின் சிறப்பு பொருளாதார மண்டலத்தைமக்கள் சாலையில் இறங்கி தடுத்து நிறுத்திவிட்டார்கள். இவை எல்லாம் நம்பிக்கை தரும் செய்திகள். எனினும் இன்றைக்குதலித்துகளிடம் போராட்டக்குணம் நீர்த்துப்போய்விட்டதோ என்ற அச்சம் எனக்குண்டு. எங்கள் போராட்டங்களைக் கண்டு அரசும்ஆட்சியாளர்களும் அச்சப்பட்ட காலம் ஒன்றுண்டு. அன்றைக்கெல்லாம் ஒரு பிரச்சனை என்றால் சாலையில் இறங்கி நின்றுபோராடிய பொதுமக்கள் இன்றில்லை. தலித் துகளின் வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம்சார்ந்தவர்கள் இன்றைக்கு குடிசை வாழ் தலித்துகளுக்காக போராட சாலையில் இறங்கத் தயாராக இல்லை. போராட்டகுணம்குறைந்துவிட்டது. இன்றைய சூழலில் மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டுவதன் மூலமே நம்மை நோக்கியிருக்கும் சவால்களைஎதிர்கொள்ள முடி யும். ஆனால் அதுவே காணாமல் போய்க் கொண்டிருக்கி றதோ என்ற அச்சம் கவலைத்தருகிறது.

தலித் பெண்களின் தனித்துவமான பிரச்சனைகள் என்று எவற்றை அடையாளப்படுத்துவீர்கள்? தலித் இயக்கங்கள்அவற்றைக் கவனத்தில் கொண்டுள்ளனவா?

போராட்டகளத்தில் நிற்கும் ஒவ்வொரு தலித் ஆண்மகனின் வீட்டிலிருக்கும் பெண்களும் அதே போராட்டகளத்தில் நிற்கும் தலித்அல்லாத ஆண்மகனின் வீட்டிலிருக்கும் பெண் களும் அடிப்படையில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையை நாங்கள்கவனத்தில் கொண்டிருக்கிறோம். தலித் போராடினால் அவனை அடக்க அவன் வீட்டுப் பெண்டுபிள்ளைகளை வன்கொடுமைசெய்கிறார்கள். அன்றுமுதல் இன்றுவரை தொடரும் கதை இது. தலித் அல்லாத ஆண்மகனின் வீட்டுப் பெண்களுக்கு அடிப்படை யில்இந்தப் பிரச்சனை அதிகமாக இருப்பதில்லை. பெண்ணி யம் பேசும்போதும் தலித் பெண்களின் பிரச்சனைகளை தனித்துவப்படுத்திஇன்று தலித் பெண்கள் முன்வந்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இயக்கங்கள் இவற்றை என்றைக்குமே புறக்கணித்ததில்லை.

ஆனால் தலித்திய இயக்கங்களில் பெயர் சொல்லும்படியாக பெண்கள் இல்லையே? ஏன்? நீங்கள் ஆரம்பித்திருந்த தலித்பேந்தர் அமைப்பிலும் பெண்கள் நிர்வாகத்தில் இருந்ததாகத் தெரியவில்லையே?

பெண்கள் நிர்வாகத்தில் முன்வரவில்லை. தலைமைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. தலித் பேந்தரிலும் தலை மைக்கு வரவில்லைஎன்பதையெல்லாம் ஏற்றுக்கொள்கி றேன். ஆனால் சாலையில் இறங்கிப் போராட்டமா, பேரணியா.. பெரும்பான்மையான பெண்கள்அக்காலக் கட்டங்களில் கலந்துகொண்டார்கள். இன்று நிலைமை ஓரளவு மாறி வருகிறது. தலைமைக்கு வரவும் நிர்வாகபொறுப்புகளை ஏற்கவும் பெண்கள் தயாராகிவிட்டார்கள்.

இங்கு சிலைகளை வைத்து நடக்கும் அரசியல் அறிந்ததுதான். இது வரை அரசாங்கங்களும் கட்சிகளும் வைத்துள்ளபெரும்பாலான சிலை கள் தலித்தல்லாதவர்களுடையதே. ஊடகங்களில் வெளியாகும் அரசுத் துறை விளம்பரங்களில்ஆளுயரத்திற்கு நின்று புன்னகைப்பதும் இவர்களே. விபத்தில் மறைந்த ராஜசேகர ரெட்டிக்கு 12,000 சிலை களை ஆந்திராமுழுக்க வைக்கப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அரசாங்கமோ, கட்சிகளோ அவை செலவழிக்கிற தொகைபொது மக்களுடையதுதான். ஆனால் இதையெல்லாம் விரயமென்று பேசாத பொதுநல விரும்பிகள், நீதிமன்றங்கள்எல்லாம் மாயாவதியின் சிலை வைப்பு முயற்சிக்கு இப்படி கொந்தளிப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ரொம்ப சிம்பிள். அவர் ரெட்டி, இவர் மாயாவதி. மாயாவதி ரெட்டியாக இருந்திருந்தால் இந்தக்கேள்வியே வந்திருக்காது. இந்த இடத்தில் இன்னொரு செய்தியையும் சொல்லியாக வேண்டும். உ.பி.யில் தலித்துகளுக்கும் பிற சிறுபான்மை மக்களுக்கும் செய்யவேண்டிய உருப்படியான காரியங்கள் நிறைய இருக்கிறது. மாயாவதி தன் அதிகாரத்தையும் ஆற்றலையும் காட்டவும் நிலைநிறுத்தவும் களங்கள் பல உ.பி.யில் இருக்கின்றன. எனவே இந்த சிலை விவகாரத்தில் எல்லாம் தன் நேரத்தையும்ஆற்றலையும் வீணடிக்கக் கூடாது. தொலைநோக்குப்பார்வையுடன் கூடிய எதிர்காலத் திட்டங்களில் அவர் கவனம் செலுத்தவேண்டும்.

மாயாவதியின் அரசியல் வெற்றி தலித் சமூகத்தின் வெற்றியா?

இல்லை. மாயாவதியின் அரசியல் வெற்றிகளை நாமும் ஊடகங்களுடன் சேர்ந்து பாராட்டலாம். ஆனால் ஊடகங்கள் சொல்வதுபோலஅவர் தலித்துகளின் அடையாளம் அல்ல. இந்த வெற்றியை அடைய அவர் கொடுத்திருக்கும் விலை என்ன ? அவரை ஆதரிக்கும் புனே டி.எஸ். குல்கர்னி ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். மாயாவதி தேர்தலில் நிறுத்திய நாசிக் 'மகந்த' ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். இந்தமாதிரி விலையைக் கொடுத்து மாயாவதி தலித் சமுதாயத்திற்கு என்ன செய்து விடப்போகிறார்? அண்மையில் தாதர் சிவாஜி பார்க்கூட்டத் திற்கு வந்தவர் அங்கிருக்கும் அம்பேத்கரின் சைதன்ய பூமிக்குக்கூட போகவில்லை! she lost her dalith idealogy.

சைதன்யபூமி கிட்டத்தட்ட ஒரு வழிபாட்டுத்தலம் போலதானே இருக்கிறது? செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவது, பூ வாங்கி அர்ச்சனை செய்வது இத்யாதி காட்சிகளைப் பார்க்கிறோமே..அம்பேத்கரை நாம் கடவுள் ஆக்கிவிட்டோமோ?

சைதன்யபூமிக்கு வருகிறவர்களுக்கும் திருப்பதிக்கு போய் வருகிறவர்களுக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.எதையும் வேண்டிக் கேட்டு, கேட்டது கிடைத்து விட்டால் அதற்குக் கைமாறாக எதையாவது செய்து தன்னை யும் தன் கடவுளையும்ஏமாற்றிக்கொள்ளும் கூட்டமல்ல சைதன்யபூமிக்கு வருபவர்கள். அன்பை, மரியாதையை தங்களுக்குத் தெரிந்தவகையில்வெளிக்காட்டும் மக்கள். தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு தலைவனுக்கு தங்கள் நன்றியை மட்டும் காட்டவரும் மக்கள். மும்பையில் பிறந்து வளரும் நம் வீட்டு பிள்ளைகள் சாதியம் தெரியாதவர்களாக ஏன் சாதியற்றவர்களாக இருக்கிறார்கள். சாதியற்றவர்கள் என்று சொல்வதில் பெருமைதான் எனினும் சாதிப்படிநிலை மாறாத இச்சமூக அமைப்பில் அவர்களுக்கான இடம்..

இன்று நம்மைப் போன்ற பலர் குடும்பத்தில் இப்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அமெரிக்கன் சிலிக்கன் வேலியில்டாலராக சம்பாதிக் கும் அவாள் வீட்டுக்குழந்தைகள் தங்கள் மேனிலையைக் காப்பாற்றிக் கொள்ள டாலர் டாலராக விஷவ இந்துபரிஷத் மாதிரி அமைப்புகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். நம் தலித்துகளிடம்தான் நவ தலித் பிராமணர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். நம் குடியிருப்பில் எத்தனை தலித்து கள் இருக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு? உங்களையும்என்னையும்போல அவர்கள் தம்மை தலித் என்று சொல்லிக் கொள்வதில்லை. தங்கள் அறிவு, பணம், பதவி இந்த சமூகத் தின்ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு பயன்பட வேண்டும் என்ற சமூக விழுமியத்தை நாம் நம் குடும்பங் களின் தனிமனிதவிழுமியமாகக் கடைபிடிக்க வேண்டும்.

II

இந்து மதத்தின் பிடியிலிருந்து தம்மக்களை விடுவிப்பது என்ற அம்பேத்கரின் அடிப்படை நிலைப்பாட்டை பல தலித்இயக்கங்கள் கைவிட்டு விட்டது எதனால்? இந்துமதம் அவற்றையும் உட்செரித்துக் கொண்டதா?

மிகவும் விரிவாக பேசப்பட வேண்டிய விசயம் இது. பாபா சாகிப் one man one vote என்று அரசியல் சட்டத்தின் மூலம் சமஉரிமைகொடுத்த பிறகுதான் பவுத்தம் தழுவினார். அப்படியானால் அரசியல் சட்டம் மட்டுமே சமூகத்தில் சம உரிமையை தம் மக்களுக்குகொடுக்க முடியாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். மராட்டியத்தில் தலித்துகள் மகர், சம்பார், மாத் என்று மூன்று பெரும்பிரிவுக்குள் அடங்குவர். இதில் மகர் பிரிவினர் முதலில் அம்பேத்கரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு சமூகத்தளத்தில் சமஉரிமைப்போராட்டக் களத்தில் முன் நின்றார்கள். அதனால்தான் காங்கிரசு இயக்கம் கூட மகர் அல்லாத ஜெகஜீவன்ராம் அவர்களை அம்பேத்கருக்கு எதிராக நிறுத்துவதற்காகவே வளரவிட்டது. இந்தப் பிரிவுகளில் ஒருசாரார் அம்பேத்கரை ஏற்றுக்கொள்வதில் தயக்கம்காட்டினார்கள். இன்றும் அவர்களைப் பயன் படுத்திக் கொண்டுதான் சிவசேனை, பாரதிய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகள் "இந்து தலித்துகள்" என்ற முத்திரையுடன் நம் மக்களைப் பிளவுபடுத்தி இருக்கிறார்கள். அம்பேத்கர்கூட அரசியல் களத்தில்அவருடன் எவ்விதத்திலும் ஒப்புமைப்படுத்த தகுதியில்லாத வேட்பாளருடன் போட்டியிட்டு மும்பையில் தோல்விஅடைந்திருக்கிறார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் தலித் அரசியல் இயக்கங்களையும் பவுத்தத்தையும் இணைத்து பார்க்கும்யதார்த்தத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை யோசித்துப் பாருங்கள்.

ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். நானே சட்டசபை தேர்தலில் நிற்பதாக வைத்துக் கொள்வோம்.என் தொகுதியில் இருக்கும்அனைத்து வாக்காளர்களையும் சந்திக்கும்போது அதில் சிலர் கணபதி கோவிலுக்கு அழைத்து அர்ச்சனை செய்யலாம். சிலர் மசூதிக்குஅழைக்கலாம். அவர்களுடன் சேர்ந்து நோன்பு கஞ்சி குடிக்கலாம்... இதை எல்லாம் எவ்விதமான தடைகளுமின்றி இந்துமதவேட்பாளரால் செய்ய முடிகிறது. இதையே நான் செய்தால் அது கேள்விக் குறி ஆவது தவறு. இன்னொரு முக்கிய விசயத்தையும்கவனிக்கத் தவறிவிட் டோம். நீங்கள் (புதியமாதவி) படித்தவர், தொலைக்காட்சி பார்க்கவும் நேரமில்லாமல் வாசிப்பு, கருத்தரங்கு,இலக்கியம் என்று உங்கள் நேரத்தைக் கழிக்க முடிகிறது. ஆனால் பெரும்பான்மையான மக்கள் கதி? அவர்களுக்கான வடிகால்?எனக்குத் தெரிந்து பவுத்தம் தழுவிய நன்கு படித்த குடும்பங்கள்கூட வெளியில் பவுத்தம் சார்ந்தும் குடும்பத்தின் பழக்கவழக்கங்கள்,சடங்கு சம்பிரதாயங்களில் ஒரு இந்துவாகவும் இருக்கிறார்கள். கண்பதி உற்சவங்கள், தசரா கொண்டாட்டத்தின் ஆடல் பாடல்கள்,தயிர்ப்பானை உடைக்கும் கோவிந்தா கோவிந்தா விளையாட்டு... இப்படி யான கொண்டாட்டங்களை தன்னுள் வைத்திருப்பதால்சாதாரண மனிதனுக்கு ,கொண்டாட்டங்களுடன் கூடிய வாழ்க்கையை அனுபவிக்க ஏங்கிக்கொண்டிருக்கும் வெகு மக்களுக்கு இந்துமதத்தில் இம்மாதிரியான வடிகால்கள் இருக்கின்றன.

பவுத்தத்தில் புத்தபூர்ணிமா, அம்பேத்கர் ஜெயந்தி தவிர்த்து கொண்டாட எதுவுமில்லை. ஒவ்வொரு மனிதனும் வாழ்க் கையைகொண்டாட்டங்களுடன் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவே விரும்புகிறான். அந்த உளவியலை மிகவும் சரியாகப் புரிந்து கொண்டதால்மட்டுமே இந்துமதம் இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி இன்றும் மக்களைக் கவர்ந்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

பவுத்தம் ஒரு மதம் அல்ல, அது ஒரு வாழ்வியல் முறை, அறி வியல் சார்ந்த பகுத்தறிவு சார்ந்த ஒரு வாழ்க்கை முறை. பவுத் தத்தில்புத்தபகவானிடம் நீங்கள் வரமெல்லாம் கேட்கும் வாய்ப்புகளே இல்லை! தனிமனிதன் கடவுளை நம்புவதும் கும்பிடுவதும் பேரம்பேசுவதும் எனக்கு நீ இதைக் கொடு நான் உனக்கு இந்தப் பூஜை செய்கிறேன் என்றெல்லாம் கேட் பதும் பவுத்தத்தில் சாத்தியமேஇல்லை. தனிமனிதனை, அவ னது சிந்தனைகளையும் மீறிய சில உளவியல் தாக்கங்கள் ஆட்சி செய்துக் கொண்டிருக்கின்றன. இந்தஇடத்தில்தான் வெகுஜனமும் அவர்களின் உளவியலும் பவுத்தம் போன்ற அறிவியல் சார்ந்த பகுத்தறிவு வாழ்வியலுக்கே சவாலாகஅமைந்துவிடுகிறது. இதில் பார்த்தீர்கள் என்றால் இன்னொரு வேடிக்கை. என்னவோ விவரம் தெரியாத நம்வீட்டு பெண்களோமுதியவர்களோ மட்டும் இப்படி இருக்கிறார் கள் என்று சொல்வதற்கில்லை. அறிவியலில் கரைகண்ட இன்றைய நம் இளையதலைமுறையும் பவுத்தத்தைப் புரிந்து கொண்டும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று ஒத்துக்கொண்டும் தசராகொண்டாட்டத்தில் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள்.. அம்மாதிரியான கொண்டாட்டங்கள் அவர்களுக்கும் பெரிதும் தேவைப்படுகிறது..

ஒருகாலத்தில் தலித்துகள் கும்பிட்ட சிறுதெய்வங்கள் காணாமல் போய்விட்டன. அவர்களைப் போலவே இருந்த அவர் களின்கோரமுக தெய்வங்களை அவர்கள் மறந்து பலகாலம் ஆகிவிட்டது. அலங்காரங்களுடன் கூடிய பெருந்தெய்வ வழிபாட்டுக்குவந்துவிட்டார்கள். உங்களுக்குத் தெரியுமா.. பத்துப்பதினைந்து வருடத்திற்கு முன் மும்பையில் சித்தி விநாயகர் கோவில் குறித்துயாருக்கும் தெரியாது. இன்று பாருங்கள் அந்தக் கோவிலுக்கு வந்திருக்கிற மவுசை! ( நான்: ஆமாம்.. அசோக்சவான்கூடமுதலமைச்சரானவுடன் சித்தி விநாயகர் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்திருக்கிறாரே.. பார்த்தீர்களா..?)

ஒரு மதமும் அது சார்ந்த கருத்துருவாக்கமும் பொதுமக்களிடம் பரவ அரசு எந்திரங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. சக்கரவர்த்திஅசோகர் பவுத்தம் தழுவிய பின் இந்திய மண்ணில் பெரும்பகுதி அவர் அரசாட்சியில் இருந்ததால் பவுத்தம் வேகமாகப் பரவியது.என்னதான் செக்குலர் பேசினாலும் இந்திய அரசும், ஊடகங்களும் இந்துத்துவா சார்ந்தே இயங்கிக்கொண்டிருக்கின்றன.இம்மாதிரியான புறம் சார்ந்த காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பலசமயங்களில் இதனால் தான் நான்அடிக்கடி சொல்வதுண்டு, இயக்க அரசியலையும் தனிமனித மத நம்பிக்கைகளையும் சேர்த்து குழப்பிக்கொள்ளக் கூடாது. மதம்அகம்சார்ந்தும் அரசியல் புறம்சார்ந்தும் சமூகத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்றை இன்னொன்று ஆட்சி செய்யவோ அடக்கிஆளவோ முயற்சிக்கும் போது கலவரங்கள் நடக்கின்றன.

எனில் அம்பேத்கரின் பவுத்த மதமாற்றம் தோல்வி அடைந்துவிட்டதா?

இல்லை. அது அன்றைய தேவை. இன்று பவுத்தம் அடுத்தக் கட்ட நகர்வுக்கு/ மாற்றத்திற்கு உள்ளாக வேண்டிய தேவைவந்திருக்கிறது.

பவுத்தம் தழுவிய தலித்துகளை இன்றும் neo buddist என்று தனித்து தான் அடையாளப்படுத்துகிறார்கள். எனவேமதமாற்றம் தீர்வாக இருக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட சூழலில் தலித்துகள் எல்லா மத அடையாளங்களையும்துறக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளதா?

எல்லா மத அடையாளங்களையும் துறப்பது என்ற தீர்வு என்றைக்குமே வெகுஜனத்திற்கான தீர்வாக இருக்கவே முடியாது. எனவேதான் தலித்துகள் அனைவரையும் நாத்திகராக் காமல் பாபாசாகிப் அறிவியலும் பகுத்தறிவும் சார்ந்த வாழ் வியல்தத்துவங்களைப் போதித்த பவுத்தம் தழுவினார்.

நீங்கள் பவுத்தம் ஏற்றபின் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் கண்டீர்கள்? உங்களை நியோ புத்திஸ்ட் என்றுதானேஅழைக்கிறார்கள்?

50 வருடங்களில் மிகப்பெரிய மாற்றங்களை, நம்பிக் கையை,சுயமரியாதையை, உத்வேகத்தை ஆற்றலை எங்களுக்கு பவுத்தன் என்ற அடையாளம் கொடுத்திருக்கிறது. உலக வரலாற்றில் இந்த மாதிரி ஒன்றை உங்களால் சொல்ல முடியாது. அதனாலேயேஎல்லா கொடுமைகளும் முடிவு பெற்றுவிட்டது என்று நாங்கள் நினைத்து எங்களை ஏமாற்றிக்கொள்ளவில்லை. பவுத்தம் ஏற்றகயர்லாஞ்சி பய்யாலால் கதை உங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்காக அவர்களுக்காகப் போராடும் உத்வேகத்தை அறிவாற்றலைஎங்களுக்கு பவுத்தம் கொடுத்திருக்கிறது.

சாதியொழிப்பு சாத்தியம்தானா? அல்லது அதை ஒரு தொலைதூர லட்சியமாக வைத்துக்கொண்டு சாத ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பதில் தலித்துகளின் ஆற்றல் கழியுமா?

புத்தர் காலத்திற்கு முன்பே சாதி அமைப்பும் தீண்டாமையும் சமூகத்தில் வந்துவிட்டது. 2500 ஆண்டுகால ஒரு சமூக அமைப்பைமாற்றுவதும் மக்கள் அடிமனதில் ஊறிப்போன சாதிய வேர்களை அறுப்பதும் அவ்வளவு எளிதான காரிய மல்ல. இது ஒரு தொடர்போராட்டம்தான். சரி, நீங்கள் கேட் பது போல இப்படியான தொடர் போராட்டங்களில் நம் ஆற்றல் கழியுமா என்றால் இல்லை. இந்தப்போராட்டங்கள் தான் நம் மக்களைத் தூக்கிப்பிடித்து தாங்கி நிற்கும் தூண்கள். இவை சரிந்துவிட்டால் ஏறிய உயரத்தைவிட வேகமாகஅதல பாதாளத்தில் மீண்டும் நாம் தள்ளப்படுவோம். மொரிஷியஸ் தீவுக்குப் போனவர்கள் இன்று தங்கள் மூதாதையரின் சாதிஅடையாளத்தைத் தேடி அலைவதாக வாசித்திருக்கிறேன். இந்துமதம் இருக்கும்வரை இந்தியாவில் சாதியும் இருக்கும்.

III

தலித் இலக்கியம் புழக்கத்திலிருந்த மையநீரோட்டத்தில் இணைந்து விட்டதா? அல்லது தனித்துவத்தோடு வளர்நிலையை எட்டியிருக்கிறதா?

தலித் இலக்கியம் மைய நீரோட்டத்தில் இணைந்துவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் தலித் இலக்கியம்இலக்கியத்தின் ஒருவகை. மராட்டிய இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் அதில் தலித் இலக்கியம் என்பது மராட்டிய இலக்கியத்தின்ஒருவகை. மற்ற இலக்கியங்களில் ஏற்பட்டிருக்கும் இசம், உத்தி மாற்றங்கள் தலித் இலக்கியத்தி லும் மாற்றத்தை ஏற்படுத்திஇருக்கின்றன.

தலித் இலக்கியம் வடிவத்திலும் பேசுபொருளிலும் அடைந்துள்ள மாற்றங்கள் என்று எவற்றை அவதானிக்கிறீர்கள்?

மராத்தி இலக்கியத்தை உலகத்தரம் வாய்ந்த இலக்கியமாக் கியதில் தலித் படைப்பாளர்களின் பங்கு மகத்தானது. ஆரம்பகாலங்களில் எடு துப்பாக்கியை, வெடிக்கட்டும் தோட்டா, குண்டுமழை, ரத்தம், காயம் என்று எழுதிக் கொண்டிருந் தோம். இன்றுஅப்படி எழுதுவதில்லை. இலக்கியத்தின் அனைத்து உத்திகளையும் தலித் இலக்கியம் தனக்குள் வாங்கி செரித்து நிற்கிறது. மத்தியவர்க்கம், உயர்தர மத்திய வர்க் கம்,கூட்டுக்குடும்பச் சிதைவு, உலகமயம் என்று பல்வேறு தடங்களில் கிளை பரப்பி நிற்கிறது. பெண்கவிஞர்களின் பங்களிப்பு பெருமை சேர்த்துள்ளது. சத்யா பவார், ஊர்மிளா பவார் எழுத்துகளை எல்லாம் குறிப்பிட்டு சொல்லலாம்.இன்னொரு பெரிய மாற்றம் அன்று எழுதியவர்கள் இயக்கம் சார்ந்த களப்பணியாளர்கள். இன்று அப்படியில்லை.

தலித் இலக்கியத்தை பௌத்த இலக்கியமாக நீங்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை?

தலித் இயக்கம் தலித் இலக்கியம் என்பது ஓர் உணர்வு, சமூக மாற்றத்தை விரும்பும் ஓரியக்கம். இதற்குள் பௌத்த இலக்கியமும்இடம் பெறலாமே தவிர தலித் இலக்கியத்தை பௌத்த இலக்கியமாக அடையாளப்படுத்தமுடியாது.

தலித் படைப்புகள் ஒரே சாயலில் -ஸ்டீரியோ டைப்- ஆக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு பொதுவாக வைக்கப்படுகிறதே?

ஆரம்பகாலங்களில் இப்படி எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். இன்றைக்கு மகர்களின் படைப்புகளை வாசித்துவிட்டு மராத்தாக்களும்தங்கள் யதார்த்த வாழ்க்கையை எழுதத் துணிந்தார்கள் என்பது தான் உண்மை. புதிய சொல்லாக்கங் களை, பழைய சொற்களுக்குப்புதுப்புது அர்த்தங்களை எங்கள் படைப்புகள் தான் மராத்திய மொழிக்கு கொடுத்திருக் கிறது. இன்றைக்கு மராத்திய அரசு தலித்இலக்கிய சொல் லாடல்களுக்கு தனி அகராதியே கொண்டுவரப்போகிறது என்றால்.. அந்தளவுக்கு இந்த மொழியை நாங்கள் வசப்படுத்தியிருக்கிறோம்!

நாராயண் சுர்வேயின் கவிதைகள் ஃபக்தா சிறுபத்திரிகையில் வெளி வந்தன. சிறுபத்திரிகைகளின் பங்களிப்பையும்மராத்திய இலக்கியத்தில் ரொம்பவும் முக்கியமானதாகச் சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?

உண்மைதான் சிறுபத்திரிகைகளின் பங்களிப்பு அதிகம். நான்கு நண்பர்கள் சேர்ந்தால் உடனே ஒரு சிறுபத்திரிகை ஆரம்பிப்பது, சிலகாலம் வரும் பிறகு நின்று போவது எல்லாம் நடந்தது. கோபங்கொண்ட இளம் தலைமுறையினரால் ஆரம்பிக்கப்பட்டசிறுபத்திரிகைகள் நாளடைவில் தனி நபர் ஆதிக்கத்துக்குட்பட்டன. அதனால் அந்த இயக்கம் தோற்றுப்போனது என்று வைத்துக்கொண் டாலும் சதீஸ் கலேஸ்கர், துளசிபரப் , ராஜா தலே என்று பல எழுத்தாளர்களை அடையாளம் காட்டியதில் அதன் பங்குமகத்தானது.

மூன்றுவகையான தலித் எழுத்தாளர்களை இன்று காணலாம். ஒன்று: கல்லூரி பேராசிரியர்கள். இரண்டாவது வொயிட் காலர் ஆபீஸ்மக்கள். மூன்றாவது தொழிலாளர்கள். சில சமயங்களில் எனக்கு அச்சம் ஏற்படுவதுண்டு. தலித் இலக்கியம் ரொம்பவும் (academic level)அகடெமிக் இலக்கியமாகிக் கொண்டிருக்கிறதோ என்று. தலித் இலக்கியம் தலித் இயக்கம் சார்ந்தே இருக்க வேண்டும் என்பதுதான்என் போன்றவர்களின் விருப்பம்.

தொடக்கத்திலிருந்த படைப்பு உத்வேகம் இப்போதும் உங்களிடமிருக்கிறதா? தங்களின் சமீபத்திய படைப்பு முயற்சிகள் எவை?

நான் 1967 களிலேயே இயக்கம் சார்ந்து செயல்படவும் எழுதவும் ஆரம்பித்துவிட்டேன். 67களில் ரிபப்ளிகன் ஐக்கிய பார்ட்டியுடன்சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன். என்ன அன்றுபோல உத்வேகத்துடன் ஓடிய ஓட்டம் இன்று களப் பணியில் சற்றுகுறைந்திருக்கலாமே தவிர எழுத்துப் பணி எப்போதும் போல தொடர்கிறது. அண்மையில் என் கட்டுரைகளின் தொகுப்பு நூல் (neh abivithi - blue underline) வெளிவந்துள்ளது.

நாடு தழுவிய அளவில் தலித் எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கான செயலூக்கம் கொண்ட ஒரு கூட்டமைப்பின் தேவையை உணர்கிறீர்களா? அதற்கான முன் முயற்சிகளைத் தங்களைப் போன்றவர்கள் ஈடுபடுவது தானே வலு சேர்ப்பதாக இருக்கும்?

பலமுறை இதைப்பற்றி நாம் பேசி இருக்கிறோம். ஒருமுறை தமிழகத்தில் பிரிந்துகிடக்கும் தலித்திய இயக்கங்களை ஒன்றிணைக்கநான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கூட நாம் பேசியிருக்கிறோம். நான் பேசுவது மட்டுமல்ல .. உங்களைப் போன்றவர்களும் முன்வர வேண்டும்.

மராத்தியில் தன்வரலாற்று இலக்கியவகை ரொம்பவும் பிரசித்தமானது. உங்களுடைய சுயசரிதையை எப்போது எதிர்பார்க்கலாம்?

(சிரித்துக்கொண்டே..) என் சுயசரிதம் என்பது நானும் என் குடும்பமும் என் எழுத்துகளும் மட்டுமல்ல. என் வாழ்க்கை ஓர் இயக்கம் சார்ந்தது. எங்கள் இயக்கம் குறித்தும் , என் தோழர்கள் குறித்தும் நிறைய உண்மைகளை எழுத வேண்டியிருக்கும். அப்படி எழுதாமல் இருந்தால் அது சுய சரிதையாக இருக்கவும் முடியாது. என்ன.. அதனால்.. புனைவுகளின் ஊடாகப் பயணித்து ஒரு நாவல் எழுதலாம்என்ற எண்ணமிருக்கிறது.

***
காணவில்லை: டானியலின் கல்லறை
Wednesday, January 27, 2010
- ஆதவன் தீட்சண்யா


இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஊழியர். இலங்கை தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராட கட்சியின் முன்னெடுப்பில் உருவான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். மார்க்சீய அறிதல்முறை மற்றும் தலித் உள்ளுணர்வின் வழியே சமூகத்தின் அடிப்படையையும் நிகழ்வுப் போக்குகளையும் விளங்கிக் கொண்டவர். தமிழர் என்ற பொது அடையாளத்திற்கு வெளியே தாழ்த்தப்பட்ட மக்களை நிறுத்திவைப்பதற்கு சாதியம் வழங்கிக் கொண்டிருந்த உளுத்துப்போன நியாயங்களையும் நடைமுறைகளையும் தனது எழுத்தாக்கங்கள் வழியே அம்பலப்படுத்தியவர். அவரது எழுத்துகள் அவரை தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடி என்ற பெருமைக்கு உயர்த்தி நிறுத்தியுள்ளன. விழுங்க முடியாத முள் அல்லது மறக்க முடியாத சொல்லாக அவரது பெயர் மேலெழுந்து வந்தது. அ.மார்க்ஸ், தஞ்சை பிரகாஷ் போன்ற தமிழக எழுத்தாளர்கள் பலருடனும் தோழமை கொண்டிருந்தவர்.
... இப்படி சொல்லிக் கொண்டே போகுமளவுக்கு புரட்சிகரமான வாழ்வைக் கொண்டிருந்த தோழர் கே.டானியல், மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்து 1986 மார்ச் 23 அன்று தஞ்சையில் காலமானார்.வெண்மணிக்குப் போய் அந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு வரவேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறாமலே போய்விட்டதென்கிறார் அவரது உற்றத்தோழர் வி.ரி.இளங்கோவன். பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளும் டானியல் நினைவுநாளும் ஒன்றுதான். டானியலின் கல்லறையை மக்கள் கலை இலக்கியக் கழகம் கட்டியெழுப்பியிருந்ததாக தோழர்கள் சிலர் கூறினார்கள். அ.மார்க்ஸுக்கும், பொ.வேலுச்சாமிக்கும் இதில் கூடுதல் பங்களிப்பு இருந்திருக்கிறது. கடந்த சிலவருடங்களில் மாதம் ஒருமுறையாவது ஏதேனுமொரு வேலையாக தஞ்சாவூருக்குப் போய்வந்து கொண்டுதானிருக்கிறேன். டானியலின் கல்லறையை இம்முறையாவது பார்த்துவிட்டு வரவேண்டும் என்று ஒவ்வொருமுறை போகும்போதும் நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால் நிகழ்ச்சிகள், அதற்குப் பிறகு தோழர்களுடனான சந்திப்புகள் என்று இருந்துவிட்டு கிளம்பி வந்து வண்டி பிடிப்பதே வழமையாய் இருந்தது. இம்முறையும் அப்படி வந்துவிட்டிருந்தால் மனம் தொந்திரவு அடைந்திருக்காது என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

2010 ஜனவரி 22 அன்று தஞ்சை மாவட்ட தமுஎகச செயலாளர் களப்பிரனின் தங்கை திருமணம். மண்டபத்திலிருந்து அறைக்குத் திரும்பி தோழர்கள் தஞ்சை சாம்பான், சோமலிங்கம் ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். கொஞ்சநேரத்தில் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜாவும் திரைத்துறையில் பணியாற்றி வரும் தோழர் சசிகுமாரும் வந்து சேர்ந்தார்கள். உரையாடல் எனது இலங்கைப் பயணம் குறித்து திரும்பியது. ( ஆதவன் எப்படி போய்வந்தார் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று விஷமத்தனமாக பாவ.செயப்பிரகாசம் பழிபோட்டுக் கொண்டிருக்கிறாரே அந்த பயணம் பற்றியதுதான். அவருக்கு பதில் சொல்ல இதுவல்ல இடம். வேறு இடம் கிடைத்தாலும் அவரது ஊத்தை உளறல்களுக்கு பதில் சொல்லி ஆகப்போவதென்ன?) மலையகத்திலாகட்டும் கொழும்பு அல்லது யாழ்ப்பாணத்திலாகட்டும் அங்குள்ள எழுத்தாளர்கள் மறைந்த தோழர் டானியல் மீது வைத்திருக்கும் ஈடுபாடு அளவற்றதாய் இருப்பதையும், ஹரிகிருஷ்ணனின் மணல்வீடு டானியல் சிறப்பிதழாக வெளியானதை அவர்களில் பலர் நினைவு கூர்ந்ததையும் சொல்லிக் கொண்டிருந்தேன். டானியலின் நாவல்கள் குறித்து புதுவிசையில் லெனின் மதிவானம் எழுதிய கட்டுரை, டென்மார்க்கிலிருக்கும் தோழர் கரவைதாசன் கொண்டு வரவிருக்கும் இனி இதழில் வி.ரி.இளங்கோவன், சிவசேகரம், சி.கா.செந்திவேல், எஸ்.சந்திரபோஸ் ஆகியோர் டானியல் பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் என்று அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருந்த போதுதான், டானியல் கல்லறைக்குப் போவமா தோழர் என்று கேட்டேன். பிறகென்ன, ஐந்துபேரும் கிளம்பினோம்.

தஞ்சையின் ராஜகோரியும் அதையடுத்துள்ள இடுகாடும் திறந்தவெளி பீக்காடாக நாறிக் கொண்டிருக்கின்றன. உயிருள்ள மனிதர்கள் வாயில் மலத்தை திணிக்கிற கேடுகெட்ட நாட்டில் செத்தவர்கள் மேல் கழிந்துவைப்பதில் யாருக்கு என்ன வருத்தமிருக்கப் போகிறது? பட்டுக்கோட்டை அழகிரியின் கல்லறைக்கு அருகில்தான் டானியலின் கல்லறை என்று உறுதியாக தெரிவித்த சாம்பான் அவ்விடத்திற்கு அழைத்துப்போனார். (பாவம் திமுக. யாராவது ஒரு அழகிரியை மட்டும் பார்த்துக்கொள்கிற வலுவும் மனமும்தான் அதற்கிருக்கிறது போலும். பட்டுக்கோட்டை அழகிரியெல்லாம் இனி எதற்கு? சீந்துவாரற்று கிடக்கிறது அந்த கல்லறை).

தஞ்சை சாம்பானும், சசிகுமாரும் அங்குமிங்குமாக தேடிச் சலித்துவிட்டு கடைசியில் உதட்டைப் பிதுக்கி நின்றனர். இத்தனைக்கும் அவர்கள் ஏற்கனவே டானியல் கல்லறைக்கு வந்துபோனவர்கள்தான். ஆனால் அப்படியெதுவும் அங்கு தென்படவில்லை. சந்தேகம் வந்துவிட்டால் பானையைத் திறந்து யானையைத் தேடுகிற மாதிரி அவரும் சசியும் அங்குமிங்குமாக அலைந்தார்கள். ராவணன் என்கிற தோழரை செல்போனில் அழைத்து சரியான இடம் குறித்த விவரங்களைத் கேட்டுக்கொண்டு மீண்டும் தேடினோம். ஒருவேளை இவர்கள் சரியான இடத்தை மறந்திருக்கக்கூடும் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
தோழர்.அ.மார்க்ஸ் சரியான இடத்தை சொல்லக்கூடும் என்ற நம்பிக்கையில் அவரை அலைபேசியில் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. ஒருவேளை யாராவது இடித்துத் தள்ளியிருப்பார்களோ என்று யோசிக்கக்கூட எனக்கு தைரியம் வரவில்லை. சோர்வும் ஏமாற்றமும் பீடித்த மனநிலையோடு அறைக்குத் திரும்பிய கொஞ்நேரத்தில் தோழர் மார்க்ஸ் லைனில் வந்தார். விசயத்தை சொன்னதும் அவரும் பதறிவிட்டார். அவருக்கும் டானியலுக்குமான நெருக்கமும் தோழமையும் அப்படியானது. அழகிரியின் கல்லறைக்குப் பக்கத்தில் அதேவரிசையில்தான் டானியல் கல்லறை என்று உறுதியாக தெரிவித்தார். பிப்ரவரி 2ம் தேதி தஞ்சை வரவிருப்பதாகவும் அப்போது நேரில் சென்று பார்ப்பதாகவும் அவர் கூறியது சற்றே ஆறுதலாயிருந்தது. இடுகாடு முழுவதும் மண்டிக் கிடக்கும் முட்புதருக்குள் டானியலின் கல்லறை சேதமின்றி இருக்கிறது தோழரே, நீங்கள்தான் சரியாய் தேடிப் பார்த்திருக்க தவறிவிட்டீர்கள் என்று மார்க்ஸ் சொல்ல வேண்டுமென விரும்புகிறேன்.

தோழர்கள் சசியும் கீரனூர் ஜாகீர் ராஜாவும் அலைபேசியில் தெரிவித்த அண்மைச்செய்திகள்:
மொழிப்போர் தியாகிகள் கூட்டத்திற்காக தஞ்சை வந்திருந்த தமிழச்சி தங்கபாண்டியனிடமும், எஸ்.தேன்மொழியின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்காக வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரிடமும் டானியலின் கல்லறைக்கு நேர்ந்துள்ள கதியை சசி எடுத்துரைத்திருக்கிறார். இதனிடையே தஞ்சை மாநகராட்சி உறுப்பினராயிருக்கும் சசியின் நண்பர் குமார், “உலகம் போற்றும் ஒரு எழுத்தாளரின் கல்லறையைக்கூட நம்மால் பாதுகாக்க முடியவில்லையே” என்கிற அவமானமும் ஆதங்கமும் கொண்டு இப்பிரச்னையை 25.01.2010 அன்று அவைக்கூட்டத்தில் எழுப்பியிருக்கிறார். டானியலின் கல்லறைக்கு நேர்ந்த கதியை தஞ்சை நாளிதழ்களும் கவனப்படுத்தி வெளியிட்டுள்ளன. டானியல் இப்போது ஒரு பேசுபொருளாகியிருக்கிறார் தஞ்சையில். “சரியான இடத்தை கண்டுபிடித்து சொல்லுங்கள், அவருக்கு நேர்ந்த அவமானத்தைப் போக்கும் வகையில் மிகச்சிறப்பாக கல்லறையை எங்கள் செலவில் எழுப்பித் தருகிறோம் என்று பலர் முன்வந்திருப்பதாக சசி கூறிய தகவல் நெகிழ்ச்சியளிக்கிறது. புனரமைப்புக்கு உதவி தேவையெனில் தயங்காமல் கேளுங்கள் தோழரே என்று உயிர்மெய் தமயந்தியும் (நார்வே) கூறியிருக்கிறார்.

தோழர் டானியலின் நினைவுநாளான மார்ச் 23 நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு கம்யூனிஸ்டாக இருந்து போராடி ஈட்டிய வெற்றிகள், அவரது நூல்கள், அவர் உருவாக்கிய அறிவுப் பாரம்பரியம், முன்னெடுத்த தலித் இலக்கியம் ஆகியவற்றின் வழியாக நம்முடனேயே இருக்கும் தோழர் டானியலுக்கு அவரது கல்லறையையாவது மீட்டுத்தர என்ன செய்யப்போகிறோம்? அந்த பீக்காட்டில் அவரது கல்லறையை மறுபடியும் தேடப்போகிறோமா அல்லது அவருக்குரிய மரியாதையுடன் புனரமைக்கப்பட்ட ஒரு கல்லறையின் முன் அஞ்சலி செலுத்தப்போகிறோமா என்பதை அரசாங்கமும், தஞ்சை மாநகராட்சியும்தான் இனி சொல்லியாக வேண்டும்.

2. கல்லறைகளைப் பற்றிய பிற நினைவுகள்


அ) லண்டன் ஹைகேட் இடுகாட்டில் இருக்கும் காரல் மார்க்சின் கல்லறையைப் பார்க்க இப்படித்தான் நானும் ஷோபாசக்தியும் கீரனுடன் கிளம்பிப்போனோம் ஒரு சாயங்காலப் பொழுதில். சுடுகாட்டை பூட்டிவைப்பார்கள் என்று எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கடுங்குளிர் காலமானதால் மாலையில் 4.30 மணிக்கே கதவடைத்துவிட்டார்கள். எதெதற்கோ சுவர் தாண்டுகிறவர்கள் இருக்க, மார்க்ஸ் கல்லறையைப் பார்க்க சுவரேறி குதித்தால் என்ன என்றுகூட யோசித்தோம். கீரன்தான் நாளைக்கு வருவோம் என்று சமாதானம் சொன்னார். பிறிதொருநாள் நானும் காண்டீபனும் போய் பார்த்தோம். யாரோவொரு தனிநபர்தான் தன் சொந்த செலவில் மார்க்சின் கல்லறையைக் கட்டியதாக சொன்னார்கள். அந்த கல்லறைத் தோட்டத்தில் 300 வருடங்களுக்கு முந்திய பல கல்லறைகளைக்கூட காணமுடிந்தது.

ஆ) கலை இலக்கிய ஆளுமைகளின் கல்லறைகள் ஆழ்ந்த பொறுப்புணர்வுடனும் அழகுணர்ச்சியுடனும் பிரான்சில் பராமரிக்கப்படுவதை நேரில் கண்டு நெகிழ்ந்த அனுபவத்தை ஓவியர் ட்ராட்ஸ்கி மருது பல்வேறு சந்தர்ப்பங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இ) இலங்கை மலையகப்பகுதியில் வீறுடன் செயல்பட்ட செங்கொடி சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான தோழர் சுந்தரம் அவர்களின் கல்லறையைப் பார்த்ததும்கூட இப்படியான ஒரு அனுபவம்தான். கடும் மழையில் சிக்கிக் கொண்டு வெகுவாக தாமதமாகி இருட்டும் நேரத்திற்குதான் அங்குபோய் சேர முடிந்தது. ஒரு தேயிலைத் தோட்டத்தினூடே நீளும் சாலையொன்றின் ஓரத்தில் சுந்தரத்தின் கல்லறை இருந்தது. தொழிலாளி வர்க்கத்திற்காக தோழர் சுந்தரம் ஆற்றிய பணிகள் குறித்து மரியாதை கொண்டிருந்த சிங்களவரான ஒரு கம்யூனிஸ்ட் தன் சொந்த செலவில் அந்த கல்லறையை கட்டியதாக தோழர்கள் ஜேம்சும் மகேந்திரனும் தெரிவித்தார்கள்.
தொழிலாளர்களை ஒடுக்கி தனக்கு ஆதாயம் தேடித் தந்த பெரிய கங்காணிகளின் கல்லறைகளை எஸ்டேட் நிர்வாகங்களே கட்டி வருடந்தோறும் நினைவுதினத்தை அனுஷ்டித்து வருவதும், தமக்காக உழைத்து மாண்ட ஒரு தலைவரின் கல்லறையை தொழிலாளிவர்க்கம் கண்டுகொள்ளாதிருப்பதும் ஏனோ இவ்விடத்தில் நினைவில் தோன்றி உறுத்துகிறது.

ஈ) சேகுவேராவை கொன்றவர்கள் அவரை எங்கே புதைத்தார்கள் என்பது 30 வருடங்கள் கழித்தே வெளியுலகுக்கு தெரியவந்தது. கொன்றபிறகும் ஆத்திரமடங்காமல் சேவின் கரங்களை மணிக்கட்டுடன் வெட்டியெடுத்துவிட்டு புதைத்தார்கள் என்கிற குறிப்புதான் கண்டுபிடிக்க உதவியாய் இருந்தது. தோண்டியெடுக்கப்பட்ட அவரது எலும்புக்கூடு வழியே உலகம் மீண்டும் சேகுவேராவை கண்டது.

உ)டானியலின் கல்லறையை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கு வருந்திய தோழர்.அழகிய பெரியவன், பெருநகரத்தின் கழிவுகளால் திணறி அழுக்கேறிப் போன கடலின் ஓரத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சமாதி முறையான பராமரிப்பின்றி இருந்ததைக் காணநேர்ந்ததாக கவலை தோயக்கூறினார்.


கட்டுரையாசிரியர் ஆதவன் தீட்சண்யா பற்றி மேலும் அறிய "பண்புடன்" தளம் செல்க!
ஈழத்து எழுத்தாளர் கே. டானியல் அவர்களின் சமாதி புதர்மண்டி மோசமான நிலையில் உள்ளது!
Friday, January 29, 2010
ஈழத்து எழுத்தாளர் கே. டானியல் அவர்களின் சமாதி புதர்மண்டி மோசமான நிலையில் உள்ளதாக தஞ்சாவூர் நகரமன்ற திமுக உறுப்பினர் குமார் அவர்கள் அண்மையில் நடைபெற்ற தஞ்சாவூர் நகரமன்றக் கூட்டத்தில் முறையீடு செய்து பேசினார். அவரது பேச்சின் சுருக்கத்தினையும் அதற்கு ஆனையாளர் நடராஜன் அவர்களின் பதிலையும் உள்ளடக்கி ஜனவரி 26ஆம் திகதி தினமணியில் கீழ் வருமாறு செய்தி வெளியாகியுள்ளது.



தஞ்சாவூர், ஜன. 25: […] திமுக உறுப்பினர் குமார்: ராஜகோரி மயானத்தில் பட்டுக்கோட்டை அழகிரி, புகழ்பெற்ற ஈழத்து எழுத்தாளர் கே. டானியல் உள்ளிட்ட பலரின் சமாதிகள் உள்ளன. இவற்றை பார்ப்பதற்காக பல ஊர்களிலிருந்தும் இங்கு வருகின்றனர். ஆனால், இந்த மயானம் புதர்மண்டி மோசமான நிலையில் உள்ளது. முள்புதர்களை அகற்றி, வேலி அமைப்பதோடு, தண்ணீர் வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையர் நடராஜன்: மயானத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு ஜாதியினர் தனித்தனி பகுதியில் கல்லறைகள் கட்டியுள்ளனர்.
இவற்றை வேலி கொண்டு பிரிப்பதால் பிரச்னை ஏற்படும். ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. மோட்டார் வைத்தால் பாதுகாப்பு இருக்காது. ஏற்கெனவே இங்கிருந்த பல பொருள்கள் திருட்டுப்போயுள்ளன என்றார் அவர்.[…]

தகவல்: கவின்மலர்