| புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (30) 30. ‘மார்க்சியவாதிகள்’ திசைமாறி தமிழ் தேசியவாதிகளுடன் இணைந்தமைக்கான காரணிகள்! எமது கட்சியிலிருந்து தமிழ் தேசியவாத இயக்கங்களுடைய அணிகளுக்குத் தாவியோர் பட்டியல் சற்று நீண்டது. புலிகளுடன் மட்டுமின்றி அநேகமாக எல்லா இயக்கங்களிலும் அவர்கள் இணைந்தனர் என்று கூறலாம்.புளொட் இயக்கத்திலும் தோழர்கள் கரவை கந்தசாமி, அ.கௌரிகாந்தன் போன்றோர் இணைந்ததுடன் முக்கிய பொறுப்புகளிலும் இருந்தனர். அதேமாதிரி எமது கட்சியின் வட பிரதேச முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த தோழர் வீ.ஏ.கந்தசாமி உட்பட கே.சுப்பையா, எஸ்.சிவதாசன் போன்றோர் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தில் இணைந்து முக்கிய பொறுப்புகளில் இருந்து செயல்பட்டனர். (சிவதாசன் பின்னர் டக்ளஸ் தேவானந்தா ஈ.பி.ஆர்.எல்.எப்பில் இருந்து விலகி ஈ.பி.டி.பி கட்சியை ஆரம்பித்த போது அதில் சேர்ந்து, பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து அண்மையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது) முல்லைத்தீவு மாவட்டத்தில் கட்சி மற்றும் விவசாயிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த தோழர்கள் இ.வே.துரைரத்தினம், இ.விக்கினராஜா, க.கந்தசாமி போன்ற தோழர்கள் ஈரோஸ் இயக்கத்தில் இணைந்ததுடன் பாராளுமன்றத் தேர்தல்களிலும் அவ்வியக்கத்தின் சார்பாகப் போட்டியிட்டனர். நெல்லியடி – கரவெட்டி பகுதிகளைச் சேர்ந்த சில தோழர்கள் ரெலோ இயக்கத்தின் தாஸ் பிரிவுடன் தொடர்பு வைத்து வேலை செய்தனர். இதுதவிர எமது கட்சியே நேரடியாக ஆரம்பித்த ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ என்ற அமைப்பில் கட்சி சார்பாக பல தோழர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த முன்னணியில் முக்கிய பொறுப்பு வகித்த தோழர் வி.விசுவானந்ததேவன் எமது கட்சி மீதான நம்பிக்கையை இழந்து, ஜனநாயக முன்னணி மீதான கட்சித் தலைமையை நிராகரித்து, அதன் பெயரை ‘தமிழீழ தேசிய விடுதலை முன்னணி’ (NLFT) என பெயர் மாற்றி தனியாகச் செயற்பட்ட போதும், பின்னர் அதில் பிளவு ஏற்பட்டு ‘தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி’ (PLFT) என்ற அமைப்பை உருவாக்கிய போதும், பல கட்சி உறுப்பினர்கள் அந்த இயக்கங்களில் சேர்ந்து செயல்பட்டனர். இவ்வாறாக எமது கட்சியைச் சேர்ந்த பல முக்கிய உறுப்பினர்கள் பல்வேறு இயக்கங்களை நாடிச் சென்றுவிட்ட ஒரு சூழலில், என்னைப் போன்ற சிலர் தான் கட்சியில் எஞ்சியிருந்தோம். கட்சி முற்றுமுழுதான ஒரு ஸ்தம்பித நிலையை அடைந்தது என்றே கூறலாம். இருப்பினும் இன்று திரும்பிப் பார்க்கையில், தமிழ் தேசியவாத இயக்கங்களில் முதன்மை இடம் வகித்த விடுதலைப் புலிகளின் முற்றுமுழுதான அழிவும், ஏனைய இயக்கங்கள் கூட இன்றும் அந்த தமிழ் தேசியவாத அரசியல் போக்கிலிருந்து மீள முடியாமல், இரண்டும் கெட்டான் நிலையில் அரசியல் எதிர்காலம் இல்லாமல் தத்தளிப்பதுமான சூழலில், எம்முடன் உறுதியுடன் எஞ்சி நின்ற தோழர்களின் நிலைப்பாட்டில் இருந்த தெளிவையும், நம்பிக்கையையும் எண்ணிப் பெருமிதம் கொள்ள வைக்கிறது.எம்மைவிட்டுச் சென்றவர்களின் தவறைக் கேலி செய்வதோ, அவர்கள் நம்பிச் சென்ற இயக்கங்களின் அர்ப்பணிப்புகளைக் கொச்சைப்படுத்துவதோ எனது நோக்கமல்ல. தமிழ் தேசியவாத இயக்கங்கள் அவர்களது முன்னோடி கட்சிகளான தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டான தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து முளை விட்டதால், அவர்களைக் குறை கூறுவதில் பிரயோசனம் இல்லை. ஆனால் எமது கட்சியிலிருந்து அந்த இயக்கங்களுக்குச் சென்றவர்கள் நிச்சயம் விமர்சனத்துக்கு உரியவர்கள். ஏனெனில் எமது கட்சி என்பது வெறுமனே ஒரு கதம்பக் கூட்டமல்ல. கட்சியின் வாலிப அணியில் இணைவதென்றாலே நீண்டகாலம் பல்வேறு துறைகளில் உழைத்தே அதை அடைய முடியும். முதலில் ஆழமான தத்துவார்த்தக் கல்வியும், பின்னர் வெகுஜன அமைப்புகளில் வேலையும் கட்டாய நடைமுறைகளாகும். இப்படியான அக்கினி பரீட்சைகளுக்குள்ளால் வந்தவர்கள், இனத் தேசியவாத அலையில் அடித்துச் செல்லப்படுவதென்றால் அது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஆனால் திசைமாறிச் சென்ற தோழர்களின் தவறை, வெறுமனே அவர்கள் குற்றமாக மட்டும் வைத்து நோக்குவதும் தவறாகும். அந்த நிலைமைக்கு கட்சித் தலைமையும் கணிசமான பொறுப்புதாரியாகும். முக்கியமாக தேசிய இனப்பிரச்சினையில் எப்படி வேலை செய்வது என்ற வேலைத்திட்டத்தை கட்சி ஒருபோதுமே வகுத்திருக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி 1943ல் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் 1944ல் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்றும், அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டென்றும் சரியாகவே தீர்மானித்திருந்தது. இது லெனினிசக் கோட்பாட்டின் தாக்கத்தின் அடிப்படயில் எடுத்த ஒரு தீர்மானமாகும். அதன் பின்னர் 1954ல் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற கட்சியின் வட பிரதேச மாநாட்டில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணப் பகுதிகளுக்கு ‘பிராந்திய சுயாட்சி’ (சுநபழையெட யுரவழழெஅல) வழங்கப்பட வேண்டும் என்ற இன்னொரு சரியான தீர்மானமும் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தத் தீர்மானங்களுக்காக வேலை செய்வதற்கான திட்டங்கள் எதுவும் கட்சியின் தேசிய வேலைத்திட்டங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. 1964ல் கட்சி சர்வதேசரீதியில் ஏற்பட்ட சித்தாந்த முரண்பாடு காரணமாக மொஸ்கோ அணி – பீக்கிங் அணி எனப் பிளவுண்ட போது, இரு அணிகளும் சம்பிரதாயபூர்வமாக பிராந்திய சுயாட்சி தீர்மானத்தைக் கூறி வந்தனவேயொழிய அதற்காக வேலை செய்யவில்லை. இதில் இன்னும் மோசமான விடயம் என்னவெனில், பாராளுமன்றவாதப் பாதையில் சென்ற மொஸ்கோ அணி தாம் கூட்டுச் சேர்ந்திருந்த சிங்கள தேசிய முதலாளித்துவவாத சக்திகளுடன் சேர்ந்து, சிங்கள மக்களின் வாக்குகளைக் கவருவதற்காக “தோசை – மசாலவடை” என இனவாதக் கோசங்களைக்கூட எழுப்பினர். பிற்காலத்தில் அந்தத் தவறு சீர்செய்யப்பட்டதாயினும், கட்சியின் வரலாற்றில் அந்தக் கறை எப்பொழுதும் அழியாத அடையாளமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மறுபக்கத்தில் பாராளுமன்றவாதப் பாதையை நிராகரித்து புரட்சிகரப் பாதையில் பயணிப்பதாகச் சொன்ன பீக்கிங் அணிக்கு (நானும் அதில்தான் இருந்தேன்) தலைமைவகுத்த நா.சண்முகதாசன், தோழா ஸ்டாலின் அன்றைய ரஸ்ய சூழலில் ஒரு தேசிய இனத்துக்கு வரைவிலக்கணமாகக் கூறிய நான்கு விதி முறைகளை வைத்துக்கொண்டு, இலங்கைத் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமே அல்ல என்று வாதிட்டு வந்தார். தமிழ் மக்களின் பொருளாதாரத்தையும் ‘மணி ஓடர்’ (ஆழநெல ழுசனநச) பொருளாதாரம் என்றே அவர் குறிப்பிட்டு வந்தார். தமிழ் மக்களின் தேசிய உரிமைகளுக்காகப் போராடுவது என்பது, ‘வகுப்புவாதம்’ என அவரது தலைமை வாதிட்டது. மலையகத் தோட்டத் தொழிலாளர் மத்தியில் ஓரளவு பலமான போராட்டக் குணாம்சம் மிக்க ‘செங்கொடிச் சங்கம்’ என்ற தொழிற்சங்கம் ஒன்றை கட்சி வைத்திருந்த போதும், அந்த மக்கள் வளர்ந்து வரும் ஒரு தேசிய இனம் என்பதைக் கணக்கில் எடுக்கத் தவறி, அவர்கள் மத்தியில் தொழிற்சங்கப் போராட்டங்களுடன் தனது பணியை மட்டுப்படுத்திக் கொண்டது. 1970ல் சிறீலங்கா – சமசமாஜ - கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பின்னர், 1971ல் ஏற்பட்ட ஜே.வி.பியின் ஆயுதக் கிளர்ச்சி காரணமாகவும், 1972ல் அந்த அரசாங்கம் கொண்டு வந்த புதிய குடியரசு அரசியல் யாப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட தமிழ் தேசியவாதப் போராட்டம் காரணமாகவும், எமது பீக்கிங் சார்புக் கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் தோன்றின. குறிப்பாக இனப்பிரச்சினை விவகாரத்தில் இரண்டு போக்குகள் உருவாகின. சண்முகதாசனும் அவரது ஆதரவாளர்களும் இனப்பிரச்சினை கூர்மையடைந்து வருவதையும், அது சம்பந்தமாக கட்சி வேலை செய்ய வேண்டிய அவசியத்தையும் நிராகரித்து, பழைய பாணியிலேயே சென்றனர். ஆனால் கட்சிக்குள் உண்மையான மார்க்சிச – லெனினிசவாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய தோழர்கள் மு.கார்த்திகேசன் - வீ.ஏ.கந்தசாமி தலைமையிலான அணியினர், தேசிய இனப்பிரச்சினையில் உருவாகியுள்ள புதிய சூழல்களைக் கவனத்தில் எடுத்து, கட்சி அதற்குரிய வகையில் வேலை செய்ய வேண்டும் என வாதிட்டனர். தோழர் கார்த்திகேசன் - கந்தசாமி அணியினர் கருத்துப்படி, தமிழ் முதலாளித்துவ பிற்போக்கு தேசியவாத சக்திகளால் ஏகாதிபத்திய சக்திகளின் தலையீட்டுக்கு வழிவகுக்கும் வகையிலும், தமிழ் மக்களுக்கு அழிவை உண்டுபண்ணும் வகையிலும் முன்வைக்கப்படும் தனித்தமிழ் நாட்டுப் போராட்டம் தவறானது, அதை மார்க்சிஸ்ட்டுகள் எதிர்க்க வேண்டும், அதேநேரத்தில் தமிழ் மக்கள் மீதான தேசிய ஒடுக்குமுறையையும் எதிர்க்க வேண்டும் என்ற சரியான நிலைப்பாட்டை முன்வைத்தனர். இந்த நிலைப்பாட்டையும,; வேறு சில அடிப்படை விடயங்களில் சரியான நிலைப்பாட்டையும் (ஐக்கிய முன்னணி, தேர்தல் போன்ற) சண்முகதாசன் அணியினர் ஏற்க மறுத்ததால், 1972ல் கட்சியில் பிளவு தவிர்க்க முடியாமல் போய்விட்டது. அதன் பின்னர் உருவான இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியே தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமான இரண்டு நாள் விசேட தேசிய மாநாடு ஒன்றைக் கொழும்பில் நடாத்தி, அப்பிரச்சினையில் கட்சியின் சரியான கொள்கையை மீள உறுதி செய்ததுடன், தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியையும் உருவாக்கியது. ஆனால் புறச்சூழலில் உருவாகிவந்த தீவிரமான தமிழ் தேசியவாத அலைக்கு முகம் கொடுத்து, அப்போராட்டத்தைச் சரியான தலைமையிலும் திசை வழியிலும் கொண்டு செல்வதற்கான கால அவகாசமும், பலமும் கட்சிக்கு இல்லாததால், இறுதியில் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியும் தவறான பாதையிலேயே பயணித்தது. இந்தச் சூழலில் தேசிய இனப்பிரச்சினையில் சரியான நிலைப்பாட்டை, குறிப்பாக செயல்பூர்வமான திட்டத்தைக் கொண்டிருக்காமையும், ஆயுதப்போராட்டம் பற்றி இலங்கையிலேயே முதன்முதலாகப் பிரச்சாரம் செய்த எமது கட்சி அதற்கான வேலைத்திட்டங்கள் எதையும் கொண்டிராமையும் (இன்றைய சூழலில் ஆயுதப்போராட்டம் என்பதே கேள்விக்குரியதாகும்) எமது கட்சியின் இளம் சிங்களத் தோழர்களை ஜே.வி.பியின் பக்கமும், இளம் தமிழ் தோழர்களை பல்வேறு தமிழ் தேசியவாத இயக்கங்களின் பக்கமும் தள்ளியதற்கு காரணங்களாக அமைந்தன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்தத் தோழர்கள் இன்று தமது அரசியல் எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு அநாதரவாக நிற்பதுதான் வேதனைக்குரியது. இருந்த போதிலும், எந்தவொரு தேசியவாத இயக்கங்களிலும் இணையாமல் நம்பிக்கையுடன் பொறுமையாக சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த தோழர்கள் என்றென்றும் மதிப்புக்குரியவர்கள் என்பதுடன், புலிகளின் அழிவுக்குப் பின்னர் உருவாகியுள்ள ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி, மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் இடதுசாரிப் புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்பும் அரிய சந்தர்ப்பத்தையும் பெற்றுள்ளனர். ஆனால் நான் ஏன் எந்தவொரு தமிழ் தேசியவாத இயக்கத்திலும் சேரவில்லை என புலிகளின் விசாரணையாளன் தயாபரன் கேள்வி கேட்ட காலமோ, நான் சுதந்திரமாகக் கருத்துச் சொல்ல முடியாத ஒரு காலகட்டம். அத்துடன் கொடும் புலிகளின் கைகளில் அகப்பட்ட சிறைப் பறவையும்கூட. இருந்தும் மனம் கேட்காமல் நான் அவனுக்கு எனது மனதில் இருந்ததைப் பதிலாகச் சொல்லப்போய், பெரும் விபரீதத்தில் மாட்டிக் கொண்டேன். இதைத்தான் ‘ஆனைக்கும் அடி சறுக்கும்’ என நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றனர் போலும்! தொடரும் |

எமது கட்சியிலிருந்து தமிழ் தேசியவாத இயக்கங்களுடைய அணிகளுக்குத் தாவியோர் பட்டியல் சற்று நீண்டது. புலிகளுடன் மட்டுமின்றி அநேகமாக எல்லா இயக்கங்களிலும் அவர்கள் இணைந்தனர் என்று கூறலாம்.
நாடிச் சென்றுவிட்ட ஒரு சூழலில், என்னைப் போன்ற சிலர் தான் கட்சியில் எஞ்சியிருந்தோம். கட்சி முற்றுமுழுதான ஒரு ஸ்தம்பித நிலையை அடைந்தது என்றே கூறலாம். இருப்பினும் இன்று திரும்பிப் பார்க்கையில், தமிழ் தேசியவாத இயக்கங்களில் முதன்மை இடம் வகித்த விடுதலைப் புலிகளின் முற்றுமுழுதான அழிவும், ஏனைய இயக்கங்கள் கூட இன்றும் அந்த தமிழ் தேசியவாத அரசியல் போக்கிலிருந்து மீள முடியாமல், இரண்டும் கெட்டான் நிலையில் அரசியல் எதிர்காலம் இல்லாமல் தத்தளிப்பதுமான சூழலில், எம்முடன் உறுதியுடன் எஞ்சி நின்ற தோழர்களின் நிலைப்பாட்டில் இருந்த தெளிவையும், நம்பிக்கையையும் எண்ணிப் பெருமிதம் கொள்ள வைக்கிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment